அண்ணாமலைக்கு எதிராக அதிமுக சார்பில் அவதூறு புகார்

Spread the love

மதுரை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக மருத்துவ அணியின் மாநில செயலாளர் டாக்டர் சரவணன் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

டாக்டர் சரவணன் அளித்த புகார் மனுவில், ‘ ஆகஸ்ட் 25-ம் தேதி சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை களங்கப்படுத்தும் நோக்கில் பேசி உள்ளார். எடப்பாடி பழனிசாமியை அவமானப்படுத்தும் நோக்கிலும், பொது அமைதியை சீர் குலைக்கும் வகையிலும் அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார். ஆகவே, அதிமுக குறித்தும், எடப்பாடி பழனிசாமி மீதும் அவதூறு பரப்பி வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு பாஜக கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “ எடப்பாடி அவர்களே, சிலுவம்பாளையத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அது தொடர்பான வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவர் மேற்கு தொடர்ச்சி மலையில் ஒளிந்திருந்தார். இப்போது தி.மு.க-வில் இருக்கும் ஒரு அமைச்சர், அப்போது அ.தி.மு.க-வின் மூத்த அமைச்சர். அவருடைய கைக் காலைப் பிடித்து அந்த வழக்கிலிருந்து வெளியே வந்து, சிலுவம்பாளையம் பஞ்சாயத்து தேர்தலில் நின்று தோற்ற மனிதர் நீங்கள், அதன்பிறகு தவழ்ந்து, காலில் விழுந்து, பதவியைப் பெற்ற எடப்பாடி, 10 ஆண்டு காலமாக 10 பைசா கூட வாங்காமல் பச்சை இங்கில் கையெழுத்துப் போட்ட இந்த அண்ணாமலையை பற்றிப் பேச, பழனிசாமிக்கு தகுதி இல்லை. கூட்டணிக் கட்சி தலைவராககூட பழனிசாமியை நான் ஏற்றது இல்லை. பழனிசாமி எனக்கு பாடம் எடுக்க வேண்டாம்’ எனப் பேசியிருந்தார்.

இதனை அதிமுகவினர் பலரும் வன்மையாகக் கண்டித்து வருகின்றனர். பல இடங்களில் அதிமுகவினர் அண்ணாமலையின் உருவபொம்மை எரிப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours