சென்னை: அதிமுக எம்எல்ஏ-க்கள் குறித்து அவதூறாக பேசியதாக அதிமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கில், சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு வரும் செப்.13-ம் தேதி அன்று நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, முன்னாள் முதல்வரான ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், ஆனால் அதையேற்க திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்து விட்டதாகவும் பேசியதாக கூறப்படுகிறது.பேரவைத் தலைவரின் இந்தப் பேச்சு அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறிம் பேரவைத் தலைவர் மு.அப்பாவுவுக்கு எதிராக முன்னாள் எம்எல்ஏ-வும், அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளருமான ஆர்.எம்.பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை சிங்காரவேலர் மாளிகையில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி. ஜெயவேல் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் சம்மன் அனுப்பியும், அதை பேரவைத் தலைவர் தரப்பில் சம்மனைப் பெற மறுத்துவிட்டதாக மனுதாரரான பாபு முருகவேல் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு பேரவைத் தலைவர் தரப்பில், நீதிமன்றம் அனுப்பிய சம்மனை நிராகரிக்கவில்லை என்றும், நீதிமன்றம் தெரிவிக்கும் நாளில் ஆஜராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வரும் செப்.13-ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினம் பேரவைத் தலைவரான மு.அப்பாவு நேரில் ஆஜராக வேண்டும், என உத்தரவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours