தேர்தலில் படுதோல்வி.. நாளை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் ஈபிஎஸ்!

Spread the love

மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பிறகு தீவிர அமைதியில் ஆழ்ந்திருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை மேற்கொள்வதன் மூலம் இயல்புக்கு திரும்புகிறார்.

இந்த மக்களவைத் தேர்தலிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று பரவலான கணிப்புகள் நீடித்தபோதும், எதிர்த்து போட்டியிட்ட கட்சிகள் இவ்வாறு ஒட்டுமொத்தமாக மண் கவ்வும் என எவரும் எதிர்பார்க்கவில்லை. அதிலும் திமுகவுக்கு நிகராக தன்னை முன்னிறுத்தும் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

பிரச்சார கூட்டமொன்றில் எடப்பாடி பழனிசாமி

அதிலும் தமிழகத்தின் 7 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 8 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்தது. கூட்டணியிலும் தான் களமிறங்கிய 32 தொகுதிகளில் 9 இடங்களில் மூன்றாம் இடத்துக்கு அதிமுக தள்ளப்பட்டதும் நடந்தது. அதிமுகவின் இந்த படுதோல்வி கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூட்டணி நிலைப்பாட்டில் கட்சியின் தலைமை சொதப்பியது, தேர்தல் பிரச்சார வியூகங்களை முறையாக வகுக்காதது, வேட்பாளர் தேர்வில் சோடை போனது என கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் பலவகையிலும் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் பல இடங்களில் உயர் நிர்வாகிகள் சிலர், பாஜகவில் எழும் புகார் போன்று, தேர்தலுக்கான நிதியை முறையாக செலவிடாது விழுங்கியது குறித்தும் புகார்கள் தலைமைக்கு பறந்துள்ளன.

அனைத்துக்கும் மேலாக அதிமுக – பாஜக இடையிலான கூட்டணி மீண்டும் சாத்தியமா என்ற கேள்விகள் இரு கட்சியிலும் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. கூட்டணி தொடர்ந்திருப்பின் அதிமுக – பாஜக மட்டுமன்றி, பாமக மற்றும் தேமுதிக என இருதரப்பில் கைகோத்த கூட்டணி கட்சிகள் கௌரவமாக கரை சேர வாய்ப்பாகி இருக்கும் என்றும் பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எடப்பாடி பழனிசாமி – அண்ணாமலை

இந்த தேர்தலில் தமிழகத்தில் பாஜகவும் படுதோல்வி அடைந்திருப்பதால் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி சேரவே ஆயத்தமாகி வருகிறார்கள். இதற்கு தடையாக நிற்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சராக டெல்லி செல்வார் என்றும், பாஜகவின் சிநேக வட்டாரங்கள் அதிமுகவுக்கு சேதி அனுப்பி உள்ளன. ஆனால் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்வது பாஜக வளர்ச்சிக்கு மட்டுமே உதவுமென்றும், அதிமுகவுக்கு அது அடிச்சறுக்கும் என்றும் அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இத்தோடு மக்களவைத் தேர்தலின் முடிவில் சரியாக செயல்படாத தொகுதிகளில் மாவட்ட செயலாளர்கள் மாற்றம் இருக்கும் என தேர்தலுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி மாசெ மாற்றம் இருக்குமா அல்லது, ஒட்டுமொத்தமாக அதிமுக தோல்வியைத் தழுவியிருப்பதால் அந்த முடிவு தள்ளிப்போகுமா என்றும் மாசெக்கள் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இவை உட்பட, எதிர்வரும் சட்டப்பேரவையை இலக்காகக் கொண்டு தயாராகவும் உரிய ஆலோசனைகளை மேற்கொள்ளவும், சேலம் மாவட்டம் ஓமலூரில் நாளை கட்சி நிர்வாகிகளை சந்தித்து கலந்தாலோசனை மேற்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours