தவெக தலைவர் விஜயின் கல்வி விருது வழங்கும் விழா இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மூன்று மாணவிகளுக்கு வைர காதணி கொடுத்து வாழ்த்தினார் விஜய்.
கடந்த ஆண்டு கல்வி விருது விழா வழங்கும் நிகழ்வில் விஜய் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் கொடுத்து ஊக்கப்படுத்தினார். அதுபோல, இந்த வருடமும் அதிக மதிப்பெண்கள் எடுத்த சென்னை, கொளத்தூர் பிரதிக்ஷா, திருப்பூர், பல்லடம் மாணவி மகாலக்ஷ்மி, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் லக்ஷ்மி ஆகிய மூன்று பேருக்கு வைர காதணிகள் கொடுத்து வாழ்த்தினார் விஜய்.
கடந்த ஆண்டை போல இல்லாமல் இந்த வருடம் இரண்டு கட்டங்களாக நிகழ்வு நடக்கிறது. முதல் கட்டமாக 21 மாவட்டங்களைச் சேர்ந்த 800 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வருகிறார் விஜய். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மதியம் அறுசுவை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ் தாய் வாழ்த்து முடிந்து நிகழ்வு தொடங்கியதும் விஜய் மாணவர்களிடம் உரையாடினார். அப்போது மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் அப்போது தான் நல்லது கெட்டதை பகுத்தாய்ந்து வருங்காலத்தில் நல்ல அரசியல் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என்று அறிவுரை வழங்கினார். பின்னர், தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள போதைப் பொருட்கள் பழக்கம் பற்றி குற்றம் சாட்டியவர் மாணவர்கள் அந்த வழியில் செல்லக் கூடாது என்றும் அறிவுரை வழங்கினார்.
+ There are no comments
Add yours