2026 தேர்தலில் திமுக கூட்டணி உடையும்- தமிழிசை சவுந்தரராஜன்

Spread the love

மதுரை: தமிழகத்தில் 2026 தேர்தலில் திமுக கூட்டணி நிலைக்காது என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக புதுவை முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (அக்.14) மதுரை வந்தடைந்தார்.

தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மழையிலிருந்து மக்களை பாதுகாப்பது ஒரு புறம் என்றாலும் குளங்களை தூர்வாரி குடிநீரை சேமித்திருக்க வேண்டும். பெரியார் அணையில் குழாய்கள் உடைந்துள்ளதால் குடிநீர் வீணாகி விட்டது. குடிநீர் இல்லாமல் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதால் பிரச்சினை அதிகமாகி விட்டது. திமுக அரசு சென்னை, மதுரை, திருச்சி என அனைத்து மாவட்டங்களையும் மழைக்கு தயார் செய்வதில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது.

உதயநிதி வார் ரூமில் அமர்ந்து விட்டதால் மழைக்கான ஏற்பாடுகளை செய்து விட்டது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். ‘விடியா அரசு’ இன்று ‘விளம்பர அரசாக’ மாறிவிட்டது. மிகப்பெரிய வானியல் சாகசத்தை கூட மக்கள் மகிழ்ச்சியுடன் பார்க்கக் கூடிய ஏற்பாடுகளை செய்ய முடியாத அரசு எதற்கெடுத்தாலும் விளம்பரம் தான். அன்னை மீனாட்சி நம்மை காப்பாற்றுவாள், ஆனால் இந்த திமுக ஆட்சி நம்மை காப்பாற்றுமா என்றுதான் கவலையாக உள்ளது. திமுக ஆட்சியில் பருப்பு கூட வேகாது போல உள்ளது, தீபாவளிக்கு ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு கிடைக்காது என அச்சுறுத்தல் மக்களிடம் இருக்கிறது.

காஷ்மீர் தேர்தல் மிகப்பெரிய வெற்றி. அரியானாவில் உள்ள வாக்கு சதவீதத்தை திமுகவும் காங்கிரசும் ஆராய்கின்றனர். ஆனால் வெற்றி பெற்ற கூட்டணியை விட காஷ்மீரில் பாஜக 25 சதவீதம் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஏழு சதவீதத்திற்கு சுருங்கி விட்டது. காங்கிரஸுக்கு எதிர்காலமே இல்லை. ராகுல் காந்தி மிகப்பெரிய தலைவராக உருவெடுத்து விட்டார் என்று சொன்னார்கள். ஆனால் செயற்கைத் தலைவர்களை உருவாக்க முடியாது, மோடி போன்ற இயற்கையான தலைவர்கள் தான் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பார்கள்.

மத்திய அரசின் திட்டங்களை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் திமுக ஏற்றுக்கொள்ளவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கதிர் சக்தி திட்டம் கொண்டு வந்த போது அதை நான் முழுவதும் வரவேற்றேன். தேசத்தை சின்ன, சின்ன விஷயங்களில் கூட பிரதமர் முன்னெடுத்து செல்வதற்கு இது மிகப்பெரிய உதாரணம். ரயில் விபத்து மத்திய அரசின் சதியா என்று கூறிய ராகுல் காந்தியை வன்மையாக கண்டிக்கிறேன். வான் சாகசத்தின் போது ஐந்து பேர் உயிரிழந்தபோது அவர் எங்கே சென்று இருந்தார்.

கள்ளக்குறிச்சியில் 65 பேர் உயிரிழந்த போது ராகுல் எங்கே சென்று இருந்தார். வான் சாகசத்தில் உயிரிழந்த சம்பவம் போல பாஜக ஆளுகின்ற மாநிலத்தில் நடந்திருந்தால் ஸ்டாலின் தான் முதலில் குரல் கொடுத்திருப்பார். அவரைப் போல் தான் ராகுல் காந்தியும் தமிழகத்தில் நடக்கிற அசம்பாவிதத்திற்கு குரல் கொடுக்க மாட்டார், அதனால் தான் காஷ்மீரில் மக்கள் காங்கிரஸுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்கள். ரயில் விபத்துகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.

வான் சாகசத்தில் உயிரிழந்ததை அரசியலாக்கக் கூடாது என்று சொல்கிறார்கள், ஆனால், திமுக எதை எடுத்தாலும் அரசியலாக்கும். திமுகவின் கூட்டணி கட்சிகளே அதற்கு எதிராக திரும்பி இருக்கிறது. 2026 தேர்தலில் நிச்சயமாக இதே திமுக கூட்டணி நிலைக்காது. சாம்சங் விவகாரத்தை வைத்து கம்யூனிஸ்ட் வேறு எங்கோ செல்கிறார்கள், மது விலக்கு பிரச்சினையை வைத்து விசிக ஒரு புறம் செல்கிறார்கள், தங்களுக்கும் ஆட்சியில் பங்கு எடுக்க வேண்டும் என்று தம்பி கார்த்திக் சிதம்பரம் இப்போதுதான் கொஞ்சம் தைரியம் வந்து பேசி இருக்கிறார்.

2026 தேர்தலுக்கு திமுக கூட்டணிக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் திமுக கூட்டணி வெள வெளுத்து போகும். தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. தேர்தல் வரும்போது எது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எதைப் பற்றி வேண்டுமானாலும் நடக்கலாம். இப்போதைக்கு எங்கள் வேலை எங்கள் கட்சியை பலப்படுத்துவதற்கு உறுப்பினர்களை சேர்ப்பதுதான்.

கூட்டணி குறித்து எங்கள் அகில பாரத தலைவர்கள் முடிவு செய்வார்கள். சீன தயாரிப்புகளுக்கு தடை விதித்ததுக்காக மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனுக்கும், பியூஸ் கோயலுக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்கிற முறையில் நன்றி சொல்கிறேன். மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் தீப்பெட்டி தொழில் வாழ்வாதாரமாக உள்ளது. தீப்பெட்டி தொழில் மேம்படும். மத்திய அரசின் திட்டங்கள் இந்தியில் உள்ளதை தமிழ் படுத்தினால் மக்களுக்கு புரியும், நான் புதுச்சேரியில் திட்டங்களை தமிழ் படுத்தினோம். ஆனால் இங்கு உள்ள அரசு அது தெரியாமல் இருப்பது தான் நல்லது என நினைக்கிறார்கள்.

ஆனால் நாங்கள் மத்திய அரசு திட்டங்களை மக்களுக்கு புரியும் வகையில் தமிழ்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அரசியல் கட்சித் தலைவர் தவறை உணர்ந்து அதை திருத்திக் கொள்வது ஆரோக்கியமான சூழ்நிலைதான். ஆனால், தற்போது உள்ள சூழலில் இந்து மதம் சார்ந்த கருத்துக்களை யார் எதிர்த்தாலும் அவர்களை மக்கள் எதிர்பார்கள், இந்து மதம் சார்ந்த மக்களுக்கு ஆதரவு தரவில்லை என்றால் மக்கள் அவர்களுக்கு ஆதரவு தர மறுப்பார்கள் என்கிறது தான் இன்றைய சூழ்நிலை.

அதைத் தம்பி விஜய் உணர்ந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அவரிடம் இருந்து தீபாவளி வாழ்த்தையும் எதிர்பார்க்கிறோம், அவர் மட்டுமல்ல முதல்வரிடமிருந்தும் தீபாவளி வாழ்த்து எதிர்பார்க்கிறோம். திமுக தலைவராக இல்லை என்றாலும் தமிழக முதல்வராக தீபாவளி வாழ்த்து தெரிவிக்க வேண்டும். வாழ்த்து சொல்லவில்லை என்றால் தீபாவளி கொண்டாடுபவர்கள் அவரை எதிர்ப்பார்கள். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours