கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தங்கள் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்ததற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு திமுக எம்எல்ஏ-க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபர்பபை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில், திமுக எம்எல்ஏக்களான உதயசூரியன் (சங்கராபுரம்), வசந்தம் கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்) ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக மீது பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் குற்றச்சாட்டுகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்எல்ஏ-க்கள் உதய சூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகிய இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, அதனை பாமக தலைவர்கள் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் நிரூபித்தால் தாங்கள் அரசியலை விட்டே விலகுவதாகவும் சவால் விடுத்தனர்.
இந்நிலையில் கள்ளச்சாராய விவகாரத்தில் தங்களை தொடர்புபடுத்தி பேசியதற்கு ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், நஷ்ட ஈடாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் என கூறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நோட்டீஸ் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. 24 மணி நேரத்துக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கப்படும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
+ There are no comments
Add yours