விக்கிரவாண்டியில் திமுக 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

Spread the love

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, அந்தத் தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளார் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.

ஆரம்பம் முதலே ஆதிக்கம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூலை 13) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் முதலில் தபால் வாக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், முதல் வாக்கே கையெழுத்து இல்லாததால் செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 130 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு 10 வாக்குகள் கிடைத்தன. நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் அபிநயா 2 வாக்குகள் பெற்றார்.

67,757 வாக்குகள் வித்தியாசத்தில்… – தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 20 சுற்றுகளாக வாக்கு எண்ணப்பட்டது. முதல் சுற்று முதலே திமுக வேட்பாளர் சி.அன்புமணி முன்னிலை வகித்து வந்தார். 20-வது சுற்றின் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296​​ வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா 10,602 வாக்குகள் பெற்றார். நோட்டாவில் 853 வாக்குகள் பதிவானது. 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி குறித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில், “விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு மகத்தான, மாபெரும் வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேநேரத்தில் இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகள் 11 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. பாஜக தோல்வியைத் தழுவி இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைப் பெறாத கட்சி தான் பாஜக. இறங்கி வந்து சில கட்சிகளின் தயவால் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது பாஜக.

அத்தகைய தோல்வி முகமே பாஜகவுக்கு இந்த இடைத்தேர்தலிலும் தொடர்கிறது.தோல்விகளில் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். மாநில உணர்வுகளை மதிக்காமல் ஆட்சியையும் கட்சியையும் நடத்த முடியாது என்பதை பாஜக இனியாவது உணர வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை 2019-ம் ஆண்டு முதல் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது. திமுக வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியும் அமைந்துள்ளது.

இந்த வெற்றியானது எங்களுக்கு மாபெரும் உற்சாகத்தையும், எழுச்சியையும், அதேசமயத்தில் கூடுதல் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது. நாள்தோறும் நல்ல பல திட்டங்கள் என சாதனைகள் செய்து வரும் திமுக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக, சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது. நாங்கள் எங்களது சாதனைப் பயணத்தையும், வெற்றிப் பயணத்தையும் தொடர்கிறோம்.மக்களோடு இருக்கிறோம். மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்.” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

வெற்றி வேட்பாளர் பேட்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வென்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா செய்தியாளர்களிடம் பேசுகையில், “திமுக 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இது தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்காகப் பாடுபட்ட உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்களுக்கும், எம்எல்ஏ-க்கள், மாவட்டப் பொறுப்பாளர் கௌதமசிகாமணி ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.பாமக அவர்களின் பிரச்சாரத்துக்கு ஏற்ப வாக்குகளை பெற்றுள்ளனர். இந்த வெற்றி முதல்வரின் சாதனைக்குக் கிடைத்த வெற்றி” என்றார்.

இது தேர்தலே இல்லை; ஏலம்! – விக்கிரவாண்டியில் திமுக 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் முன்னிலை பெற்றிருந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா, “நாங்கள் டெபாசிட் இழந்ததாகவே இருக்கட்டும். இந்த வெற்றி உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா என்று திமுக வேட்பாளரைக் கேளுங்கள். கடந்த தேர்தலைவிட கூடுதலாக நாங்கள் 2 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளோம். காணை பகுதியில் திமுகவினர் இளம் வாக்காளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தனர். இது தேர்தலே இல்லை. திமுகவினர் ஏலம் எடுத்துள்ளனர். வருங்காலங்களில் இடைத் தேர்தலை ஏலம் விட்டுவிடுங்கள். இதெல்லாம் தெரிந்துதான் அதிமுக பின்வாங்கியது. இது பண நாயகத்தின் வெற்றி; ஜனநாயகத்தின் மரணம்” என்றார்.

‘பாமகவுக்கே உண்மையான வெற்றி’ – விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கே உண்மையான வெற்றி கிடைத்துள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளுங்கட்சி சார்பில் பணமும், பரிசுகளும் வாரி இறைக்கப்பட்ட போதிலும், அவற்றை புறக்கணித்து விட்டு 56,261 வாக்காளர்கள் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்திருப்பது ஜனநாயகத்திற்கும், பாமக.வின் மக்கள் பணிக்கும் கிடைத்த வெற்றி ஆகும். அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் உண்மையான வெற்றி பாட்டாளி மக்கள் கட்சிக்கு தான் கிடைத்திருக்கிறது. பணத்தை வாரி இறைத்து திமுக பெற்ற வெற்றி தற்காலிகமானது. 2026 தேர்தலில் பா.ம.க. மாபெரும் வெற்றியை பெறுவது உறுதி.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 56,261 வாக்குகள் பெற்ற பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விக்கிரவாண்டி தேர்தலில் பாமக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பாமக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், களப்பணி ஆற்றிய பா.ம.க மற்றும் கூட்டணி கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours