விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் வைக்கப்படக் கூடிய இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.
சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும், குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், பொது இடத்தில் விநாயகர் சிலைகளை வைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. திருச்செந்தூரில் புதிதாக பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.
அதன்படி, இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொது இடத்தில் விநாயகர் சிலைகளை வைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடாது. சிலை வைக்கும் பகுதியில் இருக்கும் காவல்துறையினர் சிலைகளை பாதுகாக்க, இரவு பகலென்றும் பாராமல் பணி செய்ய வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, மனுதாரர் சிலை வைக்கக்கூடிய இடங்களுக்கு தனித்தனியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் உரிய அனுமதியைப் பெற வேண்டும். அதன் அடிப்படையில் சிலை வைக்க மனுதாரருக்கு அனுமதியளிக்கப்படும். மனுதாரர் காவல்துறை அளிக்கக்கூடிய விதிமுறைகளை பின்பற்றி ஊர்வலத்தை நடத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
+ There are no comments
Add yours