விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 80 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி நிலங்கள் சேதமடைந்துள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சேறு வீச்சு சம்பவம் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் பொன்முடி நேற்று மாலை விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: விழுப்புரம் மாவட்டத்தில் சராசரியாக 55 சென்டிமீட்டரும், விழுப்புரம் நகரில் 63.5 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
67 நிவாரண முகாம்களில் 4,906 பேர் தங்கி யுள்ளனர். தென்பெண்ணையாற்று கரையோரம் உள்ள திருக்கோவிலூர், திருவெண்ணெய்நல்லூர், விக்கிர வாண்டி பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் 70 சதவீதம் மின் விநி யோகம் செய்யப்பட்டுள்ளது. மழைக்கு விக்கிரவாண்டி தாலுகாவில் 6 பேரும், திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவில் 2 பேரும், விழுப்புரம் தாலுகாவில் 5 பேரும், வானூரில் ஒருவர் என 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு முதல்வர் அறிவித்த ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். மாவட்டத்தில் 26 நெடுஞ்சாலைகள் பாதிக்கப்பட்டு அதில் 17 சாலைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 9 சாலைகள் விரைவில் சரிசெய்யப்படும். மாவட்டம் முழுவதும் 80 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் சேதமடைந்துள்ளது. பயிர்கள் என கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நில உரிமையாளர்களுக்கு முதல்வர் அறிவித்த இழப்பீடு வழங்கப்படும். விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தரைத்தளம் 2 அடி உயர்த் தப்பட உள்ளது. இதன்மூலம் வரும் காலங்களில் தண்ணீர் தேங்காத அளவுக்கு திட்டமிடப்படும். என் பின்புறம் சேற்றை வீசி அரசியல் ஆக்குவதற்காக செய்துள்ளனர்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் யார் பதிவிட்டுள்ளாரோ அவர் கட்சியை சார்ந்தவர்கள் என்பது உங்களுக்கே தெரியும். என் மேல் மட்டுமல்ல உடன் வந்த ஆட்சியர் உள்ளிட்டவர்கள் மீதும் சேறு பட்டுள்ளது. இதனை பெரிதுபடுத்தி அரசியலாக்க விரும்பவில்லை. ரூ.6,000 இழப்பீடு அதிகம் அளிக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மத்திய அரசிடம் பேசி கூடுதல் நிதி பெற்றுத்தர வேண்டும் என உங்கள் மூலமாக கேட்டுக்கொள்கிறேன். ஓரிரு நாட்களில் வெள்ள நிவாரணப் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அருகில் அமைச்சர் சிவசங்கர், ஆட்சியர் பழனி.
+ There are no comments
Add yours