முகவர்களுக்கு அறிவுரை கூறிய எடப்பாடி !

Spread the love

மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அதிமுகவின் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் என்று வந்தாலே அதை நேர்மறையாகவும், நேர்கொண்டும் களமாடுகின்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை மீண்டும் பறைசாற்றுகின்ற விதமாக, நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடலேறுகள் நேர்மையாகவும், நெஞ்சுரத்தோடும், கண்ணியத்தோடும் எதிர்கொண்டு முடித்திருக்கிறோம். அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும், நன்றிகளும்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மக்கள் பெருவாரியான ஆதரவையும், வாக்குகளையும் வாரி வழங்கியிருக்கிறார்கள். நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற விடியா திமுக அரசின் மீது இருக்கிற வெறுப்பும், இந்த பொம்மை முதலமைச்சர் மீது இருக்கிற நம்பிக்கையின்மையும், இந்தத் தேர்தலில் பெருவாரியாக வெளிப்பட்டிருப்பதை நாம் கண்கூடாக கண்டிருக்கிறோம். எப்படித் தேர்தலை நாம் நேர்மறையாகவும், நெஞ்சுரத்தோடும் சந்திக்கப் பழக்கப்பட்டிருக்கிறோமோ, அதற்கு நேர் எதிர்மாறாக இந்த விடியா திமுக, எந்தத் தேர்தல் ஆனாலும் எப்படி புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்கலாம், எப்படி வாக்காளர்களின் கவனங்களை திசைதிருப்பி, மடைமாற்றி அவர்களின் வாக்குகளை களவாடலாம் என்ற எண்ணத்தோடே தொடர்ந்து தேர்தலில் வாக்குகளை களவாடி புறவாசல் வழியாகவே ஆட்சிக் கட்டிலில் ஏறி பழக்கப்பட்டவர்கள், அதைத் தொடர்ந்து செய்வதற்கு உண்டான முயற்சியை இந்தத் தேர்தலிலும் எடுத்திருக்கிறார்கள்.

தேர்தல் முடிந்து வாக்கு எண்ணும் நாளுக்காக நாம் காத்திருக்கிறோம். மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவதற்கு தயாராக இருந்து அந்தத் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கின்ற இந்த வேளையில், வாக்கு எண்ணும் மையங்களுக்குச் செல்லக்கூடிய முகவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளையும், வாழ்த்துகளையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 19.4.2024 அன்று முடிந்துள்ள நிலையில், 4.6.2024 அன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதற்காக கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற்று கழகத்திற்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் சமர்ப்பிக்கும் வகையில் பின்வரும் அம்சங்களை நினைவில் கொண்டு பணியாற்றிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

வாக்கு எண்ணிக்கையின்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்:

  • வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 4.6.2024 அன்று, கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே, தேர்தல் நடத்தும் அலுவலரால் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அடையாள அட்டையுடன் (Identity Card) வாக்கு எண்ணும் மையங்களுக்குச் சென்றுவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் காலதாமதமாக செல்லக்கூடாது.
  • வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் மேஜைகளுக்கேற்றார்போல் வாக்கு எண்ணும் முகவர்களை நாம் நியமித்திருக்கிறோம். அந்த முகவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிற நாற்காலிகளில் முதலில் சென்று அமர்ந்துவிட வேண்டும். வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே சென்றவர்கள் வாக்கு எண்ணிக்கை முடிவுற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிற வரை எக்காரணம் கொண்டும் வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து வெளியே வரக் கூடாது. மிகுந்த கவனத்தோடு வாக்கு எண்ணிக்கையை உற்று நோக்க வேண்டும்.
  • வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்தும் முறைப்படி செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்திட வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்திட வேண்டும்.
  • வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும், ஏற்கெனவே படிவம் 17C-ன் படி வாக்குப் பதிவு நாளன்று பதிவு செய்யப்பட்ட வாக்குகளும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
  • வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள், ஒவ்வொரு சுற்று முடிவிலும் அறிவிக்கப்படும் போதும், நீங்கள் குறித்து வைத்திருக்கிற வாக்குகள், தேர்தல் நடத்தும் அலுவலரால் சரியாக அறிவிக்கப்படுகிறதா என்பதை கவனமுடன் பார்க்க வேண்டும்.
  • ஏதேனும், மாறுதல்கள் இருக்கிற பட்சத்தில் வாக்கு எண்ணிக்கையை தொடராமல் தேர்தல் நடத்தும் அலுவலரிடத்திலே தெரியப்படுத்த வேண்டும். உங்களுக்கு வருகிற ஐயங்களை வாக்கு எண்ணும் மையத்தின் பிரதான மேஜையின் முன் அமர்ந்திருக்கிற வேட்பாளரின் தலைமை முகவரிடத்திலே தெரியப்படுத்தி, அதை எழுத்துப்பூர்வமாக வேட்பாளரின் சார்பாக தேர்தல் நடத்தும் அலுவலரிடத்திலே கொடுத்து அதற்குண்டான ஒப்புகையை கட்டாயம் கேட்டுப் பெற வேண்டும். அதன் பின்னர் தான் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

கொளுத்தும் வெயிலிலிருந்து எப்போது விடுதலை? மகிழ்ச்சியூட்டும் கனமழை அறிவிப்பு!

  • வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் யாரேனும் மாற்றுக் கட்சியினருக்கு ஆதரவாகவும், முறைகேடாகவும் செயல்படுகிறார்களா என்பதை உன்னிப்பாகக் கண்காணித்து, குறைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வினை காண வேண்டும்.
  • திமுக-வினர் வதந்திகளைப் பரப்புவதிலும், தில்லுமுல்லு செய்வதிலும், வன்முறையில் ஈடுபடுவதிலும் மிகவும் கைதேர்ந்தவர்கள் என்பதை இந்த நாடே நன்கு அறியும். இதற்கு கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளை உதாரணமாகச் சொல்லலாம். ஆகவே, வாக்கு எண்ணும் மையங்களில் திமுக-வினரால் தில்லுமுல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை மிகுந்த விழிப்போடு கண்காணித்து முறைகேடுகள், துஷ்பிரயோகங்கள் ஏதேனும் நிகழ்ந்தால், அது சம்பந்தமாக மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வு காண வேண்டும்.
  • கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் (Counting Agent) அனைவரும் தங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் தான் அங்கிருந்து வெளியே வர வேண்டும்.
    திமுக திட்டமிட்டே குற்றம் சாட்டுறாங்க – இபிஎஸ்
  • கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள Chief Agent-களும், தங்களுக்கான வாக்கு எண்ணும் மையங்களில், வாக்கு எண்ணும் பணி முறையாக நடைபெறுகின்றனவா என்பதை விழிப்புணர்வோடு கண்காணிக்க வேண்டும்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை உறுதி செய்திடும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும், அனைவரும் மிகவும் விழிப்புடன் இருந்து பணியாற்றுங்கள். இது, ஜனநாயகப் பயிர் தழைத்தோங்க நாம் அனைவரும் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை என்பதை நினைவில்கொண்டு பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின். எப்படை வெல்லும்.’ என்ற வரிகளுக்கேற்ப பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அம்மா ஆகியோருடைய வழியில் இந்தத் தேர்தலை நாம் கடமை உணர்வோடும், ராணுவக் கட்டுப்பாட்டோடும் கழகம் இட்ட பணியை சிரமேற்கொண்டு தேர்தல் பணிகளை நல்லமுறையில் ஆற்றியிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக வாக்கு எண்ணிக்கை பணிகளையும் கவனமுடன் மேற்கொண்டு மாபெரும் வெற்றிக் கனியை பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர், இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது பொற்பாதங்களில் சமர்ப்பிப்போம் என்று சூளுரை ஏற்போம். மீண்டும் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றிகளும், வாழ்த்துகளும்” என்று தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours