சேலம்: “நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற ஆளுங்கட்சியான திமுகவின் வெற்று அறிவிப்பினால்தான், நாம் இன்று விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்து கொண்டிருக்கிறோம். நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி, இளைஞர்களையும், மாணவர்களையும் திமுக பொய்யான செய்தியைக் கூறி ஏமாற்றி வருகிறது. மத்தியில் , காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோதுதான் இந்த தேர்வு கொண்டு வரப்பட்டது.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலத்தில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்டு மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்.10) ஆறுதல் தெரிவித்தார். பின்னர், மாணவியின் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி இரட்டை வேடம் போடுகிறது. இந்த தேர்வைக் கொண்டு வந்ததும் திமுகதான், இன்றைக்கு அந்த தேர்வை ரத்து செய்வோம் என்று நாடகத்தை அரங்கேற்றுவதும் திமுகதான். இதனால் பாதிக்கப்படுவது மாணவர்கள்தான். இப்படியாக, நாட்டு மக்களை ஏமாற்றி ஆட்சி செய்து வருகிறது திமுக அரசு.
நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற ஆளுங்கட்சியான திமுகவின் வெற்று அறிவிப்பினால்தான், நாம் இன்று விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்து கொண்டிருக்கிறோம். நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி, இளைஞர்களையும், மாணவர்களையும் திமுக பொய்யான செய்தியைக் கூறி ஏமாற்றி வருகிறது. மத்தியில் , காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோதுதான் இந்த தேர்வு கொண்டு வரப்பட்டது. பல ஆண்டு காலமாகியும், நீட் தேர்வை ரத்து செய்ய என்ன நடவடிக்கை எடுத்தார்கள். இதனால், மாணவர்களுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது. எதுவுமே கிடையாது, பொய்ச் செய்திகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றி ஒரு நாடகத்தைத்தான் அரங்கேற்றி வருகிறார்கள்.
நீட் தேர்வை ரத்து செய்வதாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது எல்லாம் மக்களை ஏமாற்றும் செயல். ஏற்கெனவே அதிமுக ஆட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றினோம். இந்த தேர்வைக் கொண்டு வந்தது யார்? திமுகவைச் சேர்ந்த காந்திச்செல்வன், அப்போது சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில்தான் இந்த நீட் தேர்வைக் கொண்டு வந்தார்கள். இந்த நீட் தேர்வை யார் ரத்து செய்ய முடியும்? நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினையைக் கொண்டு வந்துதான், இதை ரத்து செய்ய முடியும். அதற்காக திமுக என்ன முயற்சி எடுத்தது? மத்திய அரசுக்கு என்ன அழுத்தம் கொடுத்தனர்? நீட் தேர்வு இந்தியா முழுவதும் உள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல.
நீட் தேர்வு மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டம். காங்கிரஸ்- திமுக கூட்டணியில்தான் இத்தேர்வு கொண்டுவரப்பட்டது. அதை புரிந்துகொள்ள வேண்டும். இப்போது ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுப்பவர்களும் அவர்கள்தான். 2019 மற்றும் 2024-ல் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர்தான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றனர். இவர்கள் மத்திய அரசுக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுத்திருந்தால், இதற்கு ஒரு தீர்வு கிடைத்திருக்கும். ஆனால், அவர்கள் எதையுமே செய்யவில்லை.” என்று அவர் கூறினார்.
+ There are no comments
Add yours