தென்காசி: தென்காசி மாவட்டம் வடகரை அருகே விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினாலும் மீண்டும் வந்து சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வனப்பகுதிக்குள் செல்ல மறுக்கும் யானைகளை விரட்ட முடியாமல் வனத் துறையினரும் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் வடகரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய விவசாய நிலங்களில் கடந்த 2 ஆண்டுகளாக காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து விவசாய பயிர்களையும், தண்ணீர் குழாய், வேலிகளையும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளுக்கு அருகிலும் யானைகள் உலா வரத் தொடங்கியுள்ளன. வீடுகளுக்கு அருகில் உள்ள தென்னை மரங்கள், வேலிகளையும் உடைத்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மேக்கரை பகுதியில் சுற்றித் திரிந்த 4 காட்டு யானைகளை பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர். அதற்கு மறு நாளில் விவசாய நிலங்களில் சுற்றித் திரிந்து சேதப்படுத்திய மேலும் 3 யானைகளை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர். இந்நிலையில், இன்று காலையில் அடவிநயினார் நீர்த்தேக்கத்துக்கு செல்லும் பிரதான சாலை அருகில் உள்ள தென்னந்தோப்புகளில் 3-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்தன. அங்கு இருந்த 30 வருடங்கள் பழமையான 5 தென்னை மரங்களை வேரோடு சாய்ந்தன. மேலும், பிரதான சாலையை கடந்து வயல்வெளிக்குள் புகுந்து நெல் பயிர்களை மிதித்தும், நெல் வயலுக்குள் படுத்து உருண்டும் சேதப்படுத்தின.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, ”வடகரை சுற்றுவட்டார பகுதிகளில் யானைகள் தொல்லைக்கு தீர்வு இல்லாமல் நீடித்து வருகிறது. யானைகளை காட்டுக்குள் விரட்டினாலும் அவை மீண்டும் மீண்டும் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்துகின்றன. இப்போது, குடியிருப்புகளுக்கு அருகிலும் வரத் தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகளும், பொதுமக்களுக்கும் அச்சத்தில் உள்ளனர். விவசாய வேலைக்கு தொழிலாளர்கள் வர தயங்குவதால் வேலைகள் முடங்குகின்றன.
யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட முடியாமல் வனத் துறையினர் திணறுகின்றனர். யானைகள் தொல்லைக்கு தீர்வு காண அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைகளை மயக்க ஊசி செலுத்தியாவது பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும். தென்காசி மாவட்டத்தையொட்டிய வனப்பகுதியில் யானைகளுக்கு தொந்தரவு இருந்தால் வேறு எங்காவது யானைகளை கொண்டுசென்று விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
+ There are no comments
Add yours