நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை

Spread the love

குவஹாத்தி: ‘எச்.பி.இசட் டோக்கன்’ என்ற செல்போன் ஆப் மூலம் நாடு முழுவதும் பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டிருந்தது. ரூ.57 ஆயிரம் முதலீடு செய்தால் 3 மாதங்களுக்கு தினந்தோறும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என கவர்ச்சிகரமாக வாக்குறுதியால் பலர் ஏமாந்திருந்தனர். குறிப்பிட்ட மோசடி நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறையினர் நீண்ட நேரம் விசாரணை நடத்தினார்கள்.

மோசடி செய்யும் நிறுவனங்கள், விளம்பரங்களுக்கு நடிகை, நடிகைகளை அணுகுகின்றன. நடிகர், நடிகைகளும், பணம் வருவதால், அவர்களின் பின்புலம் பற்றி அறியாமல் நடித்துக் கொடுத்துவிடுகிறார்கள். தங்களுக்கு பிரியமான நடிகர், நடிகைகளே வந்து விளம்பரம் செய்வதால், உண்மையில் அந்த நிறுவனம் பெரிய நிறுவனமாகவும், நம்பிக்கையான நிறுவனமாகவும் இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

அப்படித்தான் நம்மூரில், நகை அடகுகடை விளம்பரங்கள், நகைக்கடை விளம்பரங்கள், ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் வருகின்றன. இதேபோல் சீட்டு கடை விளம்பரம், நிதி நிறுவன விளம்பரங்களும் வருகின்றன. இவற்றை உண்மை என்று நம்பி பலர் ஏமாந்து போகிறார்கள். மக்கள் மோசடியின் காரணமாக மட்டுமே பலலட்சம் கோடிகளை பறிகொடுத்துள்ளார்கள்.

அப்படித்தான் ‘எச்.பி.இசட் டோக்கன்’ என்ற செல்போன் ஆப் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் மோசடி செய்துள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட மோசடி நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, அதற்காக பணம் பெற்ற விவகாரத்தில் நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.

‘எச்.பி.இசட் டோக்கன்’ என்ற செல்போன் ஆப் எப்படி மக்களை ஏமாற்றியது : ‘எச்.பி.இசட் டோக்கன்’ என்ற ஆப் மக்களிடம் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை கூறி நம்ப வைத்து மோசடி செய்துள்ளது. பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சி என்ற பெயரில் அப்பாவி மக்களிடம் அதிக அளவில் முதலீடுகளை பெற்று மோசடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது.

அதுவும் எப்படி என்றால், ரூ.57 ஆயிரம் முதலீடு செய்தால் 3 மாதங்களுக்கு தினந்தோறும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என கவர்ச்சிகரமாக வாக்குறுதி அளிக்கப்பட்டு மக்களிடம் பணம் திரட்டி ஏமாற்றி உள்ளார்கள். ஆனால் அப்படி பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு ஒருமுறை மட்டுமே பணம் திருப்பி கொடுக்கப்பட்டது. பின்னர் புதிதாக முதலீடு செய்ய அவர்கள் பணிக்கப்பட்டனர். இவ்வாறு ஆயிரக்கணக்கான மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் சுருட்டப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக நாகாலாந்து மாநிலத்தின் கோகிமா சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்திய தண்டனை சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பல நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நிதிமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரித்து வருகின்றனர்.

இதில் கடந்த மார்ச் மாதம் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தார்கள். அதில் சீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள 79 நிறுவனங்கள் உள்பட மொத்தம் 299 நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கையில், குற்றவாளிகள் அனைவரும் எச்.பி.இசட் டோக்கன் என்ற ஆப் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனர்கள் அதிகமாக உள்ள இந்த செல்போன் செயலி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா பங்கேற்றுள்ளார். இதற்காக அந்த நிறுவனத்திடம் இருந்து அவர் பணம் பெற்றுள்ளதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள். இதைத் தொடர்ந்து தமன்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

அதன்படி அசாமின் கவுகாத்தியில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் நேற்று அவர் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். நிதி மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் தமன்னாவிடம் விசாரணை நடத்தியதுடன், அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர். நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours