நெடுஞ்சாலை துறையில் ரூ.4800 கோடி முறைகேடு தொடர்பான எடப்பாடி பழனிசாமி மீதான மேல் முறையீட்டு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கபில் சிபல் ஆஜராக எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது சென்னை உயர் நீதிமன்றத்தினால், லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
மேல் முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
+ There are no comments
Add yours