ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம்

Spread the love

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நேற்று துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் சென்னை கிண்டியை அடுத்துள்ள மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதனிடையே இளங்கோவனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜய்குமார், அமைச்சர்கள் பொன்முடி, முத்துசாமி, காந்தி, வெள்ளக்கோவில் சாமிநாதன், தா.மோ.அன்பரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, எம்.பி.க்கள் கனிமொழி, ஜோதிமணி, சுதா, கார்த்தி சிதம்பரம், கோபிநாத், முன்னாள் எம்.பி. செல்லக்குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விஜடி வேந்தர் கோ.விசுவநாதன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மக்கள் நீதி மய்யம் கட்சி செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் உள்ளிட்டோர் நேற்று ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மாலை 4.30 மணியளவில் மணப்பாக்கத்தில் இருந்து இளங்கோவனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. முகலிவாக்கம் மின் மயானத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்வில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

அவரது மறைவையொட்டி அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தமிழக பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், “ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு காங்கிரஸ் கட்சிக்கும் தமிழகத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும். இக்கட்டான காலங்களில், கட்சி குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டபோது, இளங்கோவன் தனது அசாதாரண தலைமைத்துவத்துடன் கட்சியை வலிமையுடனும் உறுதியுடனும் வழிநடத்தினார். அவருக்கு அஞ்சலி செலுத்துவதுடன் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours