காவிரி நீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து போராட்டம் நடத்திய தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனை காவல்துறையினர் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் கூறிருப்பதாவது :
காவிரி நீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் திரு.பி.ஆர்.பாண்டியன் அவர்களை காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
காவிரி நீரை நம்பி குறுவை சாகுபடியை தொடங்கிய விவசாயிகள் தண்ணீரின்றி தவித்து வரும் நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட திரு. பி.ஆர்.பாண்டியன் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வதில் அதிக கவனம் செலுத்தியிருப்பது விவசாயிகள் மீதான அக்கறையின்மையை வெளிப்படுத்துகிறது.
அதிகாரம் மற்றும் அடக்குமுறையின் மூலம் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் எண்ணம் எக்காலத்திலும் நிறைவேறாது என எச்சரிப்பதோடு, இனியாவது விவசாயிகள் பக்கம் நின்று அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours