சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆலை நிர்வாகம் நிவாரணம் அறிவித்துள்ளது.
சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தைச் சேர்ந்தவர் சகாதேவன் (55). இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் இயங்கி வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 6 அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பதற்காக ஒரு அறையில் தொழிலாளர்கள் மருந்து கலவை செய்தனர். அப்போது, உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில், மருந்து கலவை தயாரித்த அறை மற்றும் அருகிலிருந்த இரு அறைகளும் இடிந்து தரைமட்டமாயின.
இந்த விபத்தில், அச்சங்குளத்தைச் சேர்ந்த போர்மேன் ராஜ்குமார் (45), சூரங்குடியைச் சேர்ந்த மாரிச்சாமி (40), சத்திரப்பட்டியைச் சேர்ந்த மோகன்ராஜ் (35), செல்வகுமார் (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி அச்சங்குளத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (60) காயமடைந்தார். தகவலறிந்த சாத்தூர் தாலுகா போலீஸார் மற்றும் சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இறந்தவர்கள் 4 பேரின் உடல்களும் கட்டிட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மேலும், காயமடைந்த ராமச்சந்திரனும் சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் பட்டாசு ஆலை முன்பு குவிந்தனர். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுந்தனர். அதையடுத்து, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அப்போது, மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் கூறுகையில்: பட்டாசு கலவை செய்யும் அறையில் நேற்று பணி முடிந்து வேதிப்பொருள்களை முறையாக அப்புறப்படுத்தாமல் இன்று காலை மருந்து கலவை செய்ததால் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வெடிவிபத்தில் உயிரிழந்த 4 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம், ஈமச்சடங்கிற்கு ரூ.52,000 என நிவாரணம் வழங்கியிருக்கிறது ஆலை நிர்வாகம்.
+ There are no comments
Add yours