காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், 2வது நாளாக சென்னை விமான நிலையத்தில் 26 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வட மாநிலங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக இரவு வேலைகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த தொடர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கியதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது. இதனிடையே நேற்றும் சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையின்படி அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 2வது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. 26 விமானங்களின் புறப்பாடு மற்றும் தரையிறங்குதல் பாதிக்கப்பட்டு இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து 70 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், டெல்லியில் இருந்து 158 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவை தரை இறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தன.
பின்னர் கோழிக்கோடு விமானம் திருச்சிக்கும், டெல்லி விமானம் பெங்களூருக்கும் திருப்பி அனுப்பப்பட்டன. அதேபோல் மதுரை, மும்பை, கோவை, டெல்லி, ஐதராபாத், கோவா, வாராணசி உள்ளிட்ட 10 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டமடித்து தத்தளித்தன.
மழை, சூறைக் காற்று, இடி மின்னல் வேகம் குறைந்த பின் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தரை இறங்கின. மேலும் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய துபாய், குவைத், சிங்கப்பூர், கோலாலம்பூர், அபுதாபி, பாங்காக், டெல்லி, ஜெய்ப்பூர், ஹைதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 14 விமானங்கள், இடி மின்னல் சூறைக்காற்று வேகம் குறைந்த பின் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
+ There are no comments
Add yours