சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செம்மண் குவாரியில் 2006 – 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதன் மூலம் அரசுக்கு சுமார் 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம் சிகாமணிக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளி அரசுக்கு ரூ.28 கோடி அளவுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக தற்போதைய உயர்கல்வித் துறை அமைச்சரான க.பொன்முடி, அவரது மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி முன்னாள் எம்பியுமான பொன்.கவுதம சிகாமணி, திமுக நிா்வாகிகள் கோதகுமாா், சதானந்தன், ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன், கோபிநாத் ஆகிய 7 போ் மீது கடந்த 2012ஆம் ஆண்டு விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, பொன்முடி தமது மகன் கவுதமசிகாமணியுடன் தலைமறைவானார். இருவரும் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியிருந்தனர். ஆனால் முன் ஜாமீன் கிடைக்காததால் பொன்முடி கைது செய்யப்பட்டார். பின்னர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 3 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். செம்மண் குவாரி வழக்கு: இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் இறந்துவிட்ட நிலையில் அரசு தரப்பு சாட்சிகளாக 67 பேர் சேர்க்கப்பட்டனர். ஜூலை 23ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 40 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 28 பேர் பிறழ் சாட்சியமாக மாறினார். இதை அடுத்து கடந்த புதன்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இன்ஸ்பெக்டர் பழனி, விழுப்புரம் மாவட்ட குற்ற பதிவேடு காவல்துறை தலைமை காவலர் ஜெய செல்வி ஆகியோர் சாட்சியங்களாக ஆஜராகி வழக்கு தொடர்பாக சாட்சியம் அளித்தனர்.
இதனை தொடர்ந்து 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் அதிரடி நடவடிக்கையாக அமைச்சர் பொன்முடியின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மேலும் அவரது மகன் கவுதம் சிகாமணியின் சொத்துக்களும், அவர்களது குடும்பத்தினரும் சொத்துக்களுக்கும் முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்க துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 14.21 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours