கோவையில் இந்து அமைப்பினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளில் முதல் கட்டமாக 384 விநாயகர் சிலைகள், நீர்நிலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டு வருகின்றன.
கோவை மாநகரில் மொத்தம் 682 விநாயகர் சிலைகள் பல்வேறு அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் இன்றும் நாளை மறுநாளும் (வெள்ளிக்கிழமை) 2 நாட்கள் நடைபெறுகிறது. அதன்படி இன்று மொத்தம் 384 விநாயகர் சிலைகள் குறிச்சி குளம், குனியமுத்தூர் குளம், சிங்காநல்லூர் குளங்களில் கரைக்கப்படுகிறது. சிலை கரைப்பு ஊர்வலத்தையொட்டி கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் இருந்தும் சிறப்பு படை போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். சட்டம்-ஒழுங்கு பாதிக்காமல் தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. சிலை கரைப்பு பாதுகாப்பு பணிக்காக 1916 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிலை கரைப்பை ஒட்டி விநாயகர் சிலைகள் கொண்டுவரப்படும் பகுதிகளில் பாதைகளில் சுமார் 1000 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பிரத்தியேகமாக காவல்துறை சார்பில் பொருத்தப்பட்டுள்ளன
இந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகும் காட்சிகளை மாநகர காவல் துறையின் கட்டுப்பாட்டு அறையிலிருந்தும், சென்னை டிஜிபி அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் குறித்த பட்டியல் ஏற்கனவே ஒவ்வொரு சிலைக்கும் உண்டான பொறுப்பாளர்களிடம் பெறப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் உள்ளவர்களை தவிர வேறு யாரேனும் வந்தால் அவர்கள் மீதும் அல்லது அந்த சிலை பொறுப்பாளர் மீது வழக்கு பதியப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
கோவை பொருத்தவரையில் குறிச்சிகுளம், குனியமுத்தூர் குளம், சிங்காநல்லூர், உள்ளிட்ட குளங்களில் சிலைகள் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிலை கரைப்புக்கு எடுத்து வரும் வாகனங்கள் மாட்டு வண்டிகளாகவும் மூன்று சக்கர வாகனங்களாகவோ இருக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுரை வழங்கியுள்ளது. சிலைகளை கரைக்க வரும்போது சிலைகளை அலங்காரம் செய்ய பயன்படுத்தப்பட்ட மாலைகள், துணிகள், போன்றவற்றை அப்புறப்படுத்திவிட்டு தான் சிலையை கரைக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. அப்புறப்படுத்தும் பொருள்களை குளக்கரைகளில் விட்டுச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் சிறிய அளவிலான சிலைகளை வைத்திருப்பவர்கள் வீடுகளில் பக்கெட்களில் வைத்து கரைத்து விட்டு, நீரை வெளியேற்றிவிட்டு, மண்ணை தோட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
+ There are no comments
Add yours