‘இனியாவது இந்தியாவுக்காக ஆளுங்கள்’ மோடிக்கு முரசொலி ஏடு குட்டு !

Spread the love

https://politricstv.com/wp-admin/post.php?post=36248&action=edit
modi in nagercoil

’இரண்டொருவருக்காக ஆண்டது போதும் இனியாவது இந்தியாவுக்காக ஆளுங்கள்’ என கூட்டணி கட்சிகள் தயவில் ஆட்சியில் அமரவிருக்கும் மோடிக்கு திமுகவின் ’முரசொலி’ ஏடு சூடு வைத்துள்ளது.

மோடி தனது அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க சரிவை கண்டதோடு, வரும் நாட்களில் பெரும் சவால்களையும் எதிர்கொள்கிறார். பெரும்பான்மை இழந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைக்கும் மோடியை, போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் வென்ற உற்சாகத்திலிருக்கும் திமுக கூட்டணி கட்சியினர் இடித்துரைத்து வருகிறார்கள். இந்த வாய்ப்பை தவற விடாத திமுகவின் அதிகாரபூர்வ ஏடான ’முரசொலி’ தனது தலையங்கத்தில் மோடிக்கு சூடு வைத்துள்ளது.

”மக்களவைத் தேர்தல் வெற்றியை தன்னுடைய தனிப்பட்ட வெற்றியாகவே மோடி காட்ட நினைத்தார். எனவே தற்போதைய சரிவுக்கும் தோல்விக்கும் அவரே பொறுப்பேற்க வேண்டும். மோடிக்காகவே தேர்தலானது ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியா முழுமைக்கும் அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்துத் தொகுதிகளுக்கும் தானே சென்று, தானே பேசி, தானே மக்களைக் கவர்கிறேன் என்று புறப்பட்டவர் அவர். அதனால் இந்தத் தோல்விகள் அனைத்தும் அவருக்கே போய்ச் சேர வேண்டியவை ஆகும்.

ஒன்றல்ல, இரண்டு முறை பிரதமராக இருந்தார். பத்தாண்டு காலம் பிரதமராக இருக்கும் வாய்ப்பு தரப்பட்டும், கொடுத்த வாக்குறுதிகள் எதையும் அவர் நிறைவேற்றவில்லை. புதிதாக எதையும் செய்து தரவுமில்லை. அவருடைய சிந்தனையில் ‘நாடு’ அகற்றப்பட்டு, சில மனிதர்கள் மட்டும் உட்கார்ந்து கொண்டார்கள். ‘இந்தியா’வுக்காக ஆட்சி நடத்தவில்லை. விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சில இந்தியர்களுக்காக ஆட்சியை நடத்தினார்.

இறுதியாக தேர்தல் நேரத்தில் வெறுப்பை விதைத்தார். வெறுப்பை மட்டுமே விதைத்தார். ‘தினை விதைத்தால் தினை அறுக்கலாம். வினை விதைத்தால் வினைதான் அறுக்க முடியும்’ என்பதற்கு ஏற்ப அவர் விதைத்த வெறுப்பு, அவர் மீதான வெறுப்பாக திரும்பியது.

முதல் கட்ட தேர்தல் பரப்புரையின் போது மட்டும் அடக்கி வாசித்தவர், இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தனது பழைய பாணியைக் கையில் எடுத்தார். இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்புணர்வு அதில் உச்சமாக இருந்தது. இப்படி நாளுக்கு நாள் வெறுப்பை தனது உரைகளில் மோடி வெளிப்படுத்தியதற்கு, அவரது பரப்புரைக்கு எந்தவிதமான ஆதரவும் பொதுமக்கள் மத்தியில் கிடைக்கவில்லை என்பதே காரணம்.

மோடி மூன்றாவது முறை ஆள்வதற்கு மக்கள் விரும்பி இருந்தால் 300 இடங்களை பா.ஜ.க.வுக்கு கொடுத்திருக்க வேண்டும். மோடி மீண்டும் வரக் கூடாது, ஆளக் கூடாது என்றே மக்கள் வாக்களித்தார்கள். அதனால்தான் பெரும்பான்மை இடங்களைக் கூட பா.ஜ.க. பெற முடியவில்லை. இனியாவது அவர் இந்திய மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கட்டும். கண்ணீரும் கவலைகளும் இல்லாத இந்தியாவை உருவாக்கட்டும். இனிமேலாவது ‘இந்தியா’வுக்காக ஆளட்டும்!


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours