மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம்.. கனிமொழி நம்பிக்கை !

Spread the love

கோவில்பட்டி: “மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன்,” என கோவில்பட்டியில் நடந்த வாக்காளர்கள் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கூறினார்.

தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக 2-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி செவ்வாய்க்கிழமை மாலை கோவில்பட்டி பகுதியில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அவர் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட லிங்கம்பட்டி, தெற்கு மற்றும் வடக்கு திட்டங்குளம், விஜயாபுரி, கரிசல்குளம், பாண்டவர்மங்கலம், பசுவந்தனை சாலை, ஜோதி நகர், கடலையூர் சாலை, இலுப்பையூரணி தாமஸ் நகர், வடக்கு இலுப்பையூரணி, புதுக் கிராமம், வேலாயுதபுரம், காமராஜர் சிலை, அண்ணா பேருந்து நிலையம், இனாம் மணியாச்சி, ஆலம்பட்டி, படர்ந்தபுளி, முடுக்கு மீண்டான்பட்டி, நாலாட்டின்புதூர் ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தில், மக்களவைத் தொகுதி பிரதிநிதியாக எனக்கு வாய்ப்பு வழங்கி அனைவருக்கும் நன்றி. மகளிர் உரிமைத் தொகை, யாருக்கெல்லாம் கிடைக்கவில்லையோ, யாருக்கெல்லாம் நியாயமாக கிடைக்க வேண்டுமோ, அவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை பெற்றுத்தர அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன். 100 நாள் வேலைக்குரிய நாட்கள், அதற்குரிய ஊதியம் உயர்த்தப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தோம். ஆனால் மத்தியில் ஆட்சி மாற்றம் நடைபெறவில்லை. விரைவில் மத்தியில் ஆட்சி மாற்றம் வரும் என நம்புகிறேன்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் 100 நாள் வேலை, சம்பளம் அதிகப்படுத்தி தரப்படும். ஒவ்வொரு ஆண்டும் 100 நாள் வேலைக்குரிய நிதியை மத்திய அரசு குறைத்துக் கொண்டே வருகிறது. அதனால் தான் யாருக்கும் சரியாக சம்பளமும் கொடுக்க முடியவில்லை. வேலை தர முடியவில்லை. இதுகுறித்து நான் ஏற்கெனவே பாராளுமன்றத்தில் பேசும் போது, இப்பிரச்சினையை எழுப்பி உள்ளேன். தொடர்ந்து இந்த பிரச்சினை குறித்து குரல் கொடுப்பேன்,” என்று அவர் பேசினார். தொடர்ந்து மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இதில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றிய திமுக செயலாளர் முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் மற்றும் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours