சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் நேற்று முதல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற என் மண் என் தேசம் நிகழ்ச்சியில் அமிர்த கலச யாத்திரையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி தொடங்கி வைத்தார்.
இதன்பின் ஆளுநர் ஆர்என் ரவி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, சுதந்திர போராட்டத்திற்காக போராடிய மருது சகோதர்களை எத்தனை பேர் நினைவில் வைத்துள்ளோம். சுதந்திர போராட்டம் 1801ல் தொடங்கியது. இந்த மண்ணில் தான் தொடங்கியது. சுதந்திரம் மிக எளிமையாக கிடைக்கவில்லை.
மிகப்பெரிய இழப்புகளை சந்தித்தோம். ஒரே தேசத்தில் நாம் பிரிந்து உள்ளோம், ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு வருகிறோம். நாம் பிரிந்து இருப்பதற்காக சுதந்திர போராட்ட வீரர்கள் தியாகம் செய்யவில்லை. நாம் அனைவரும் ஒரே குடும்பமாக ஏன் இருக்க முடியவில்லை என ஆளுநர் கேள்வி எழுப்பினார்.
மொழி அடிப்படையிலும், மத அடிப்படையிலும் நாம் பிரிந்து உள்ளோம். சுதந்திரம் கிடைத்த போது மகாத்மா காந்தி சோகமாக இருந்தார். ஏன் என அவரிடம் கேட்ட போது, ‘பிரிட்டிஷ் ஆட்கள்தான் சென்றுள்ளனர், அவர்கள் இன்னும் வேறு வடிவில் இங்கு உள்ளனர்’ என்றார். எனவே, ஒரே தேசத்தில் நாம் பிரிந்து உள்ளோம். ஒரே குடும்பமாக இருக்க முடியவில்லை என ஆளுநர் கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours