சென்னை: சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம்தேதி, தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்களை நடத்தவேண்டும் என ஊரக வளர்ச்சி இயக்குநர் பா.பொன்னையா அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் 12,525 ஊராட்சிகள் உள்ளன. அனைத்து ஊராட்சிகளிலும் ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம், மேதினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட 6 நாட்களில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்த அரசு அறிவுறுத்தி, அதன்படி நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.15-ம் தேதி கிராமசபைக் கூட்டம் நடத்தஅறிவுறுத்துவதுடன், அதற்கான வழிகாட்டுதல்களையும் ஊரகவளர்ச்சி இயக்குநர் பா.பொன்னையா வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்: அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான ஆக.15-ம் தேதி குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்கள் வருகை இருப்பதை உறுதி செய்து கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஊராட்சியின் எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் காலை 11 மணிக்கு நடத்தப்பட வேண்டும்.
கிராம சபை நடத்துவது குறித்து பதிவு செய்ய கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி நிகழ்நேர கிராமசபைக் கூட்ட நிகழ்வுகளை உள்ளீடு செய்ய வேண்டும். மக்களுக்கு கிராமசபைக் கூட்டம் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்.
இக்கூட்டத்தில் கடந்த ஏப்.1 முதல் ஜூலை 31-ம் தேதி வரையுள்ளகாலத்தில் ஊராட்சியின் பொதுநிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட செலவு அறிக்கையைப் படித்து ஒப்புதல் பெறவேண்டும். கடந்தாண்டுக்கான தணிக்கை அறிக்கையை கிராமசபை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறவேண்டும்.
தூய்மையான குடிநீர் விநியோகம், வீட்டுவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட இதர வரியில்லா கட்டணங்களை செலுத்த இணையதள வசதியைப் பயன்படுத்துதல், இணையம் வழியாகமனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி, சுயச்சான்று அடிப்படையில் 2,500 சதுரஅடி நிலத்தில் 3,500 சதுரஅடி வரையிலான கட்டிடங்களுக்கு உடனடி பதிவு மூலம் அனுமதியளித்தல் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும்.
கட்டணம் உள்ளிட்ட கட்டிட அனுமதிக்கான வழிவகைகள் கிராமசபை முன் வைக்கப்பட வேண்டும்.மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், இந்த நிதியாண்டுக்கான தொழிலாளர் வரவு, செலவு திட்டத்தை ஜூலை 31-ம் தேதி வரையிலான முன்னேற்ற அறிக்கையுடன் ஒப்பிட்டு விவாதிக்க வேண்டும்.
மேலும், தூய்மை பாரத இயக்கப் பணிகள், ஜல்ஜீவன் இயக்கப் பணிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும். கிராமசபைக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய ஏதேனும் பிற விஷயங்கள் இருந்தாலும் சபையின் ஒப்புதலுக்கு கொண்டுவரலாம்.
இவ்வாறு அதில் அறிவுறுத் தப்பட்டுள்ளது.
அன்புமணி வலியுறுத்தல்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
வெள்ளையர்களிடமிருந்து நாம் விடுதலை பெற்று விட்டாலும்மது அரக்கனிடமிருந்து இன்னும்விடுதலை பெறவில்லை. மதுவிடமிருந்து மக்கள் மீட்கப்படும் நாள் தான் உண்மையான விடுதலை நாள் ஆகும். எனவே, ஆக. 15-ம்தேதி நடைபெறவுள்ள கிராம சபைக்கூட்டத்தில் பாமகவினரும், பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்றுதங்கள் பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும், மாநிலம் முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours