சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும், காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவருமான சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டது. கூட்டணி கட்சித் தலைவர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியாகாந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பெரும் சவால்களை எதிர்கொண்டு முன்னேறி, மேன்மைப் பண்பு கொண்ட தலைவராகத் தொடர்வது என அவரது வாழ்க்கைப் பயணம், அவரது போராட்ட குணத்துக்கும் அர்ப்பணிப்புக்கும் சான்றாகத் திகழ்கிறது.
வெற்றியும் அமைதியும் நிறைந்து, நீண்டகாலம் அவர் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா, சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, இலவச பொது மருத்துவம், கண் பரிசோதனை முகாம், ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஏழை, எளிய மாணவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
+ There are no comments
Add yours