குருப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது

Spread the love

Tamil Nadu Public Service Commission has published employment notification for Group I-B & I-C vacancies.

சென்னை: ஏறத்தாழ 16 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வு முடிவுகள் இன்று (அக்.28) பிற்பகல் வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானோர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக்காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை நிர்வாகி, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 6,244 இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன் 9-ம் தேதி ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இத்தேர்வை 15 லட்சத்து 91 ஆயிரம் பேர் எழுதினர். இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்ற போதிலும் தேர்வெழுதியவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்ஸர்) ஜூன் 18-ம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதமே வெளியாகும் என பின்னர் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, காலியிடங்களின் எண்ணிக்கை முதலில் 6,244 ஆக இருந்த நிலையில் பின்னர் முதல்கட்டமாக 480-ம் அதன்பிறகு மேலும் 2,208-ம் என கூட்டப்பட்டு 8,932 ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால், தேர்வர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளானார்கள். காரணம், காலியிடங்கள் அதிகரிக்கும்போது கட் ஆப் மதிப்பெண் குறையும்.இந்நிலையில், குருப்-4 தேர்வு முடிவுகள் இன்று (அக்.28) பிற்பகல் வெளியிடப்பட்டன. அதோடு புதிதாக மேலும் 559 காலியிடங்கள் சேர்க்கப்பட்டு தற்போது காலியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, கட் ஆப் மதிப்பெண் மேலும் கணிசமாக குறையும்.

தேர்வு முடிவுகள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அ.ஜான் லூயிஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “கடந்த ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்ட குருப்-4 தேர்வு முடிவுகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இனசுழற்சி தரவரிசை, சிறப்பு ஒதுக்கீட்டுக்கான தரவரிசை ஆகிவற்றை அறிந்துகொள்ளலாம்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை, இணையவழி விண்ணப்பத்தில் கொடுக்கபட்ட விவரங்கள், உரிமை கோரல்கள், நியமன ஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வாணையத்தால் நிர்ணயிக்கப்படும் விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வர்கள் அழைக்கப்படுவர்.சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வுசெய்யப்படுவோரின் பட்டியல் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்.

அத்தகைய தேர்வர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும். தபால் வழியாக எந்தத் தகவலும் அனுப்பப்படாது. எனவே, தேர்வர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தை தொடர்ந்து பார்வையிட்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அவர் கூறியுள்ளார்.

92 நாட்களில் தேர்வு முடிவு: குருப்-4 தேர்வு முடிந்து 92 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுற்று 92 நாட்களில் முடிவுகள் வெளியிடப்படுவது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours