கடலூர் மாவட்டத்தில் கனமழை.. குடியிருப்புகளில் தண்ணீர் !

Spread the love

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை பெய்ததால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. பல இடங்களில் மரங்கள் விழுந்தன. அவை உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டன.

ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று இரவு முதல் விடிய, விடிய கடலூர் மாவட்டம், சிதம்பரம்,பண்ருட்டி, விருத்தாசலம், வேப்பூர், அண்ணாமலைநகர், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பரவலாக மழை பெய்தது. கடலூர் புதுச்சேரியி சாலை, காட்டுமன்னார்கோவில்- ஜெயங்கொண்டம் சாலை, குள்ளஞ்சாவடி,கடலூர் கே.என் பேட்டை, கடலூர் குண்டுசாலை, கடலூர் ஜட்ஜ் பங்களா ரோடு உள்ளிட்ட பல இடங்களில் மழையால் மரங்கள் விழுந்தன. போலீஸார் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பொக்லைன் மூலம் விழுந்த மரங்களை உடனுக்குடன் அகற்றினர்.

கடலூர் நகரில் பல்வேறு சாலைகளில் ஆறு போல மழை தண்ணீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல்வேறு குடியிருப்புகளில் மழை தண்ணீர் புகுந்துள்ளது. இன்று காலை (டிச.1) கடலூர் அருகே கன மழையால் பாதிரிக்குப்பம் ஊராட்சி விக்னேஸ்வர நகர் பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளதை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ராமன், ஐயப்பன் எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இக்குழுவினர் தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.மாவட்டத்தில் மழையளவு கடலூரில் 235.5 மிமீயும், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் 213.2 மிமீயும், வானமாதேவியில் 185 மிமீயும், பண்ருட்டியில் 140 மிமீயும், விருத்தாசலத்தில் 87 மிமீயும், வடக்குத்தில் 79 மிமீயும், வேப்பூரில் 75 மிமீயும், பரங்கிப்பேட்டையில் 70.9 மிமீயும், ஸ்ரீமுஷ்ணத்தில் 68.3 மிமீயும், குறிஞ்சிப்பாடியில் 65 மிமீயும், சிதம்பரத்தில் 51.5 மிமீயும், காட்டுமன்னார்கோவிலில் 48 மிமீயும், லால்பேட்டையில் 22 மிமீயும் மழை பெய்திருந்தது.

கடலூர் புதுப்பாளையம், குடிகாடு, சிதம்பரம் அருகே ஜெயங்கொண்டப்பட்டினம் ஆகிய பாதுகாப்பு மையங்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்த தரப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours