கச்சத்தீவு தொடர்பாக மேலும் சில ஆவணங்களை கேட்டுள்ளேன்… அண்ணாமலை !

Spread the love

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் வருகிற 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தற்போது மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், களத்தில் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாக கிளம்பியுள்ளது. ஆர்.டி.ஐ தகவல்களுடன் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்கு தாரை வார்த்ததாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார். அத்துடன் காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘‘கச்சத்தீவை மீட்போம் என இன்று கூறிவரும் பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்?’’ என்றும் கேள்வி எழுப்பினார். இதேபோல், ‘‘10 ஆண்டுகளாக கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்’’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.

இந்த நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக அவர் பேசுகையில், “கச்சத்தீவு வேண்டும் என்பதே எங்களின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. கச்சத்தீவு வேண்டும் என்பதை 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் அறிவித்தோம். அதன் பிறகு இதற்கான ஒவ்வொரு பணிகளையும் செய்துகொண்டிருக்கிறோம். கச்சத்தீவை மீட்பதற்கான முக்கிய நோக்கம், அப்போதுதான் தமிழக மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.

இலங்கை அரசிடம் பேசி, கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதி பெறுவோமா அல்லது கச்சத்தீவை தமிழக மீனவர்கள் பயன்படுத்த அனுமதி பெறுவோமா அல்லது கச்சத்தீவையே திரும்ப கேட்போமா என்பது குறித்து கடந்த மூன்று ஆண்டுகளாக ஆலோசித்து வந்தோம்.

கச்சத்தீவு பிரச்சனைக்கான தீர்வை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். இது குறித்து மேலும் சில ஆவணங்களை கேட்டிருக்கிறேன். அறிவியல் பூர்வமாக, சட்ட ரீதியாக கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதை நான் உங்களிடம் தெரிவிக்கிறேன். கச்சத்தீவை மீட்பதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்காதவர்கள், தற்போது என் மீது என் மீது பாய்வது என்ன நியாயம்?.

சுப்ரமணியன் சுவாமி கடந்த 5 ஆண்டுகளாக பா.ஜ.க-வில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. விரக்தியில் இருக்கிறார். பொறுப்பு இல்லையேன்னு இருக்கிறார். மோடியை திட்டிக் கொண்டே இருக்கிறார். சுப்ரமணியன் சுவாமி யார் என்பது எல்லோருக்கும் தெரியும்.” என்று அவர் கூறினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours