சென்னை: கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் கைதான சிவராமனின் மரணம் தற்கொலைதான். சிவராமன் மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆட்சியா் அலுவலகம் அருகே கொல்கத்தா பெண் மருத்துவா் கொலையை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய சீமான், “வருத்தம் தெரிவித்து சிவராமன் எனக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கூறியிருந்தார். சிவராமனைக் காவல்துறையில் பிடித்துக் கொடுத்ததே நாம் தமிழர் கட்சியினர்தான். குற்ற உணர்வால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது மரணத்தில் எனக்கு சந்தேகமில்லை” என்று கூறினார்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த முகாமில் கலந்துகொண்ட 12 வயது மாணவியை, நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியும், போலி பயிற்சியாளருமான சிவராமன் (30) என்பவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார். மேலும், 13 மாணவிகள் பாதிக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பான புகாரில் சிவராமன் உள்ளிட்ட 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவராமன், எலிக்கு வைக்கப்படும் பசையைத் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதற்காக சிவராமனுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலையில் 5.30 மணி அளவில் சிவராமன் உயிரிழந்தார். முன்னதாக நேற்று இரவு சிவராமனின் தந்தை அசோக்குமார் (61), மதுகுடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி பலியாகி இறந்தார்.
இந்த நிலையில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் மற்றும் அவரது தந்தை என 2 பேரும் பலியான சம்பவம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக பாஜக தலைவா் அண்ணாமலை, எதிர்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் குற்றம்சாட்டி வருகின்றனா். இந்த நிலையில் சீமான் சிவராமன் மரணத்தில் சந்தேகம் இல்லை என தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours