விஜய் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வன்மமும் இல்லை- திருமாவளவன்

Spread the love

சென்னை: விஜய்யின் உரையில் இருந்த தெளிவற்ற விஷயங்களை சுட்டிக் காட்ட வேண்டிய இருந்ததால் சுட்டிக் காட்டினேன். விஜய் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வன்மமும் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திருமாவளவன் கூறியிருப்பதாவது: “எடுத்த எடுப்பிலேயே 30 சதவீத வாக்குகளை விஜய்யால் வாங்க முடியுமா? எம்ஜிஆர் கட்சி தொடங்கும் முன்பே அவர் திமுக காரர். தேர்தல் அனுபவம் உள்ளவர். அவருக்குப் பின்னால் வந்த எந்த நடிக்கருக்கும் எம்ஜிஆருக்கு இருந்த பின்னணி இல்லை. எம்ஜிஆரின் தொடர்ச்சியாகத்தான் ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்தார். விஜய்யின் உரையில் இருந்த தெளிவற்ற விஷயங்களை சுட்டிக் காட்ட வேண்டிய இருந்ததால் சுட்டிக் காட்டினேன். விஜய் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வன்மமும் இல்லை.

விசிக திமுக கூட்டணியில் உள்ள கட்சியாகத்தான் அனைவரும் பார்க்கின்றனர். திமுக கூட்டணி என்பது மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி. இந்த கூட்டணியை உருவாக்கியதில் விசிகவுக்கும் ஒரு பங்கு உண்டு. அந்த கூட்டணியின் நோக்கத்தை நோக்கி பயணிப்பதுதான் என்னுடைய தேவையாக இருக்க முடியும். அந்த கூட்டணியை சிதைக்க வேண்டும் என்று நான் ஏன் முடிவு செய்ய வேண்டும்? அந்த கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய தேவை எனக்கு என்ன இருக்கிறது? அதற்கான நெருக்கடி எனக்கு எதுவும் இல்லை.

கூட்டணியில் இருந்தால் பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கிறோம். தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டிக்கிறோம். நாங்கள் எதுவும் செய்வதில்லை என்று சிலர் சொல்கிறார்கள். அது எங்கள் மீதான காழ்ப்புணர்ச்சி. திமுகவுக்கும், விசிகவுக்கும் இடையே உரசலை ஏற்படுத்தக்கூடிய சில பிரச்சினைகளை நாங்கள் தொடுகிறோம். உள்ளே இருந்து எங்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தாலும் கூட இந்த கூட்டணியை சிதைய விடாமல் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு” இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

முன்னதாக தவெக மாநாட்டின் விஜய் பேசியது குறித்து விமர்சித்திருந்த திருமாவளவன், “திமுகவை பொது எதிரி என்று அறிவித்திருப்பதும் திமுக கூட்டணியை குறிவைத்திருப்பதும் தான் நடிகை விஜய்யின் ஒட்டுமொத்த உரையின் சாரம். பாசிச எதிர்ப்பை நையாண்டி செய்திருக்கிறார். பாசிசம் என்பது தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜகவை அடையாளப்படுத்தும் ஒரு சொல். பாசிச எதிர்ப்பு என்றால் பாஜக எதிர்ப்புதான். பாஜக எதிர்ப்பை அவர் நையாண்டி செய்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அவருடைய கருத்துக்கு அது முரண்பாடாக இருக்கிறது. பாசிசத்துக்கும் பாயாசத்துக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. பாசிசம் என்னால் என்னவென்று அவர் உணர்ந்திருக்கிறார் என்று தெரியவில்லை. விஜய்யின் நிலைப்பாட்டில் தடுமாற்றம் தெரிகிறது” என்று கூறியிருந்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours