தெலுங்கு மக்களை குறிப்பிட்டு நான் பேசிய கருத்துகளை திரும்ப பெறுகிறேன்- கஸ்தூரி

Spread the love

சென்னை: “அனைவரின் நலன் கருதி நவம்பர் 3-ம் தேதி தெலுங்கு மக்களை குறிப்பிட்டு நான் பேசிய கருத்துகளை திரும்ப பெறுகிறேன். அன்றைய என்னுடைய உரையில் இடம் பெற்ற முக்கியமான கருத்துகளை இந்த சர்ச்சை தேவையில்லாமல் திசை திருப்பி இருக்கிறது” என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “கடந்த 2 நாட்களாக எனக்கு பல மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. அவை பிரச்சினையை மேலும் தீவிரமாக்கியுள்ளது. இருப்பினும் எனது மரியாதைக்குரிய தெலுங்கு சகோதரர் ஒருவர், தமிழ்நாடு மற்றும் அதை கடந்து வாழும் தெலுங்கு மக்களுக்கு நான் பேசிய வார்த்தைகள் குறித்து பொறுமையாக விளக்கினார்.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்த நாட்டின் உண்மையான பெருமை மிகு தேசியவாதி நான். சாதி மற்றும் பிராந்திய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட எனக்கு எப்போதும் தெலுங்கு மக்களுடன் சிறந்த தொடர்பு உண்டு. அது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். நாயக்கர்கள், கட்டபொம்மன் ஆகியோரின் புகழையும், தியாகராஜர் கீர்த்தனைகளையும் கேட்டு வளர்ந்தவர் நான். என்னுடைய தெலுங்கு சினிமா பயணத்தை மிகவும் மதிக்கிறேன். தெலுங்கு மக்கள் எனக்கு பெயர், புகழ், அன்பை வாரி வழங்கியுள்ளனர்.

வருத்தம்: நான் வெளிப்படுத்திய கருத்துகள் குறிப்பிட்ட சூழல் சார்ந்து சில நபர்கள் குறித்து பேசியவையே தவிர, பெரும்பான்மையான தெலுங்கு சமூகத்தை குறிவைத்து சொல்லபட்டவை அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். குடும்பம் போன்ற எனது தெலுங்கு சமூகத்தை புண்படுத்துவதோ, காயப்படுத்துவதோ என்னுடைய நோக்கமல்ல. கவனக்குறைவாக அப்படி எதுவும் நடந்திருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவரின் நலன் கருதி நவம்பர் 3-ம் தேதி தெலுங்கு மக்களை குறிப்பிட்டு நான் பேசிய கருத்துகளை திரும்ப பெறுகிறேன். அன்றைய என்னுடைய உரையில் இடம்பெற்ற முக்கியமான கருத்துகளை இந்த சர்ச்சை தேவையில்லாமல் திசை திருப்பியிருக்கிறது. தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு சகோதரர்கள், தமிழ்நாடு பிராமணர்களின் கண்ணியமிகு போரட்டத்துக்கு துணை நிற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours