கள்ளச் சாராயத்தில் உள்ள மெத்தனால் ரத்தத்தில் கலந்தால், அதனால் ஏற்படும் எதிர்விளைவுகள் வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
பிளாஸ்டிக், ஃபைபர், பெயின்ட், மரப் பலகை போன்ற பொருள்களை உற்பத்தி செய்வதற்கும், ரசாயன மாற்றத்துக்கும் மெத்தனால் பயன்படுத்தப்படுகிறது. அதை உட்கொண்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மருத்துவர்கள் கூறியதாவது:
தொடர்ந்து மது அருந்துபவர்களுக்கு ‘டாலரன்ஸ்’ எனப்படும் தாங்குதிறன் விளைவு ஏற்படும். அதாவது, வருடக்கணக்கில் தொடர்ச்சியாக மது அருந்தும்போது வழக்கமாக அருந்தும் அளவில் போதைத் தன்மை இருக்காது. கூடுதலாக அருந்த தூண்டுதல் ஏற்படும். அதன் விளைவாகவே மது அல்லது சாராயம் அருந்துவோர் அதன் அளவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்.
பார்வை பறிபோகும்: டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகள் குறிப்பிட்ட தர நிர்ணயத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன. எனவே, அதில் மெத்தனால் இருக்காது. ஆனால், சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் தயாரிக்கும்போது நொதி நிலையில் மெத்தனால் உருவாகக்கூடும். பொதுவாக ஒருவர் அருந்தும் சாராயத்தின் அளவில் 10 மி.லி. மெத்தனால் இருந்தாலே பார்வை பறிபோய்விடும். அதுவே 40 மி.லி.க்கு மேல் இருந்தால் உயிரிழப்பு ஏற்படக்கூடும். மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தினால் 12-இல் இருந்து 24 மணி நேரத்துக்குப் பிறகே அதன் விளைவுகள் வீரியமடையும்.
வாந்தி, குமட்டல், வயிற்று வலி, நடுக்கம், காது கேளாமை, பார்வை மங்குதல், மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும். மனித உடலில் மெத்தனால் கலந்தவுடன் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அது ‘ஃபார்மால்டிஹைட்’ என்ற நச்சு பொருளாக மாற்றமடையும். அதன் பின்னர் அது ‘பாமிக்’ அமிலாக மாறும்.
இந்த வகையான அமிலம்தான் ‘பார்மாலின்’ எனப்படும் திரவமா மாற்றப்பட்டு இறந்தவர்களின் உடலை பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறாக மெத்தனால் ‘பாமிக்’ அமிலாக மாறிவிட்டால் உடனடியாக நரம்பு மண்டலத்தைப் பாதித்து பார்வை இழப்பு ஏற்படும். அதன் தொடர்ச்சியாக, கல்லீரல், சிறுநீரகங்கள் செயலிழக்கத் தொடங்கும். பின்னர் மற்ற உறுப்புகளின் இயக்கமும் முடங்கக்கூடும்.
இத்தகைய நிலையை எட்டுவதற்குள் சிகிச்சையைத் தொடங்கிவிட்டால் உயிரைக் காப்பாற்றிவிடலாம். ஆனாலும், எதிர்விளைவுகளாக பார்வை இழப்பு, நரம்பு மண்டல பாதிப்புகள், நடுக்குவாதம் ஆகியவை வாழ்நாள் முழுக்க இருக்கக்கூடும்.
+ There are no comments
Add yours