நடிகர் ரஜினி கட்சி தொடங்கி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்திருந்தால், யோகி ஆதித்யநாத் முதலமைச்சர் ஆனது போல் தமிழ்நாடு ஆகியிருக்கும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி சின்னதுரை சந்திராசெல்வி ஆகியோர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் மற்றும் தென் மாவட்டங்களில் தொடரும் சாதியப் படுகொலைகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் நெல்லை மாநகரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தோழமை கட்சிகளை சார்ந்த SDPI மாநிலத் தலைவர் முபாரக்,தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொறுப்பாளர் சுகந்தி, மாவீரன் சுந்தரலிங்கம் தேவேந்திரர் பேரவை பொறுப்பாளர் மாரியப்ப பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் தென்மாவட்டங்களில் தொடரும் சாதிய வன்கொடுமைகளை தடுக்க தமிழக அரசு தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் ரஜினிகாந்த் உத்தரபிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்து பேசுகையில்,
“சிறுபான்மையினர்களுக்கு எதிரான யோகி ஆதித்யநாத் காலில் விழுகிறார் ரஜினி. பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. அவர் கட்சி தொடங்கி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்திருந்தால், யோகி ஆதித்யநாத் முதலமைச்சர் ஆனது போல் ஆகியிருக்கும் தமிழ்நாடு.
எவ்வளவு வேதனையாக இருக்கிறது. எவ்வளவு பெரிய உயர்ந்த மதிப்பை அவர் மீது வைத்திருக்கிறோம். தலைவர்களை சந்திப்பது, முதல்வரை சந்திப்பது பிரச்சினையல்ல. ஆனால், காலில் விழுந்து வணங்குகிறார். அதற்கு என்ன பொருள்? நீங்கள் அவரை உயர்வாக மதிக்கிறீர்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
ஆனால், உங்களைப் பற்றி தமிழ்நாடு மக்கள் எவ்வளவு உயர்வாக மதித்தார்கள். எப்படிப்பட்ட உறவு உங்களுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் ஒரு நிகழ்வில் காட்டிவிட்டீர்கள். இப்படிப்பட்டவர்கள் கருத்துருவாக்கம் செய்யும் இடத்தில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் நாம் காப்பாற்றியாக வேண்டும்” என்றார்.
+ There are no comments
Add yours