விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அனைத்துக் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும் எனவும், அப்போதுதான் தேர்தல் ஆணையம் விழித்துக் கொள்ளும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிற ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு பரிசீலனை நிறைவடைந்துள்ள நிலையில், இன்றுடன் வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். தற்போது வரை 29 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்த தேர்தலை புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. தேர்தல் நியாயமான முறையில் நடைபெறாது என்பதால் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்திருந்தது. இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அனைத்து அரசியல் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ”விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அனைத்து அரசியல் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் ஆணையம் விழித்துக் கொள்ளும். திமுகவின் தலைமை கழக பேச்சாளர் போல் சபாநாயகர் செயல்படுகிறார். சட்டப்பேரவையில் விவாதம் நடத்தவே திமுக பயப்படுகிறது.” என்றார்.
+ There are no comments
Add yours