சென்னையில் பல்வேறு இடங்களில் இரவு 10 மணிக்கு மேல் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால், மதுகுடித்துவிட்டு ‘குடி’மகன்கள் செய்யும் அட்டகாசத்தால் டாஸ்மாக் கடைகளின் அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
டாஸ்மாக் மதுபானக் கடைகள் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட்டாலும், இரவு 10 மணிக்கு மேல் தான் ‘பிளாக்கில்’ மதுபான விற்பனைகளைகட்டுகிறது. சென்னையை பொறுத்த வரை, அம்பத்தூர், சூளைமேடு, பாடி, திருமுல்லைவாயல், கோடம்பாக்கம், அண்ணா நகர், கோயம்பேடு உட்பட பல்வேறு இடங்களில் இரவு 10 மணிக்கு மேல் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறிப்பாக, அம்பத்தூர் ஓடியில், திருமுல்லைவாயல் செல்லும் சோளம்பேடு மெயின் ரோட்டில் 2 டாஸ்மாக் கடைகள் எதிரெதிரே அமைந்துள்ளன. இந்த 2 டாஸ்மாக் கடைகளிலும், நாள் முழுவதும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். ஆனாலும், இரவு 10 மணிக்கு மேல்தான், வாடிக்கையாளர்கள் வருகை இங்கு அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, அதில் ஒரு டாஸ்மாக் கடையில், கடைக்கு வெளியே தகர கொட்டகை அமைத்து, இரவு 10 மணிக்கு மேல் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்கப்படுகிறது.
இரவு 10 மணிக்கு மேல் வருவோருக்கு, 2 மடங்கு அதிக விலையில் மது பாட்டில்கள் விற்கப்படுவது மட்டுமில்லாமல், சாவகாசமாக அமர்ந்து குடிப்பவர்களுக்கு ‘சைட்-டிஷ்களும்’ இலவசமாக வழங்கப்படுகின்றன. டாஸ்மாக்கடைகளின் அருகில் குடியிருப்புகள் அதிகம் இருப்பதால், இரவு நேரத்தில் ‘குடி’மகன்கள் செய்யும் அட்டகாசத்தால், குடியிருப்புவாசிகள் தூக்கத்தை தொலைத்து படாதபாடு படுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் கூறியதாவது: மது குடிப்பது எங்களுக்கு பிரச்சினை இல்லை. சத்தமில்லாமல் மதுகுடித்து விட்டு சென்றால் நாங்களும் நிம்மதியாக உறங்குவோம். சில நேரங்களில் சாலையில், நின்று இரவு 11 மணிக்கு மேல் ‘குடி’மகன்கள் சண்டையிட்டுக் கொண்டு காது கூசும் வார்த்தைகளால் ஒருவருக்கொருவர் அர்ச்சனை செய்கிறார்கள்.
எங்களது வீடுகளிலும் சிறு குழந்தைகள் இருக்கிறார்கள். தினசரி இவர்கள் செய்யும் அட்டாகசத்தால், யாருமே நிம்மதியாக உறங்க முடிவ தில்லை. இரவு 10 மணிக்கு மேல் விற்பது சட்டவிரோதம் என அரசு கூறுகிறதே தவிர விற்பவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை.
அம்பத்தூர் சோளம்பேடு சாலையில், ஒரே இடத்தில் 2 டாஸ்மாக் கடைகள் இருப்பதால், பொதுமக்கள், குறிப்பாக பெண்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, இரவு 10 மணிக்கு மேல் மது பானங்கள் விற்பதை தடுக்க வேண்டும். ஒரே பகுதியில் இருக்கும் 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்றனர்.
+ There are no comments
Add yours