கடலூர்: சிதம்பரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை போலீஸார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது தனியார் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால், பாமகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்து சிதம்பரத்தில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று (நவ.26) காலை சுமார் 11 மணி அளவில் சிதம்பரம் காந்தி சிலை அருகே மாநில வன்னியர் சங்க தலைவர் பு. தா. அருள்மொழி,பாமக மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் தலைமையில் ஏராளமான பாமகவினர் குவிந்தனர். போலீஸார் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று பாமக நிர்வாகிகளிடம் கூறினர்.
ஆனாலும் பாமகவினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் பத்து பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு தனியார் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. அப்பொழுது பாமகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது . போராட்டத்தை முன்னிட்டு சிதம்பரம் டிஎஸ்பி லா மேக் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் சிதம்பரம் காந்தி சிலை பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.
+ There are no comments
Add yours