மயிலாடுதுறை: ”ஏற்கெனவே பாமகவுக்கு ஜனநாயக ரீதியாக மக்கள் தண்டனை கொடுத்துள்ளனர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக டெபாசிட் கூட வாங்க முடியாத வகையில் மக்கள் தீர்ப்பளிப்பார்கள்” என தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
மயிலாடுதுறையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, ”காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட சிலவற்றை காப்பியடித்து மத்திய பட்ஜெட்டில் சொல்லியுள்ளனர். அருமையான தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் கொடுத்தது, அதை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று சொல்ல வேண்டும். பட்ஜெட் என்பது தேசம் முழுமைக்குமானது. பிஹாருக்கும், ஆந்திராவுக்கும் மட்டுமான நிதி நிலை அறிக்கை அல்ல. பட்ஜெட்டில் தமிழகம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
2004 முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், உணவு உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இது குறித்தெல்லாம் சொல்லாமல் தமிழக பாஜக தலைவர் உண்மைக்குப் புறம்பான பல செய்திகளை சொல்லி வருகிறார். அது கண்டிக்கத்தக்கது.
ரயில்வே பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, வேறு வகையில் செலவு செய்துள்ளதாக சிஏஜி அறிக்கை சொல்கிறது. ஆனால், பாதுகாப்புக்காகத்தான் செலவிடப்பட்டது என பாஜகவினர் பொய் சொல்கின்றனர். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும். ஜெயலலிதா இருக்கும் வரை உதய் மின் திட்டத்தில் கையெழுத்திடவில்லை. அதன் பின்னர் கையெழுத்திட்டு தமிழகத்தின் உரிமையை பறிகொடுத்துவிட்டனர். இத்திட்டத்தால் தமிழக உரிமை பறிக்கப்படும், மின்வாரிய உடமைகள் எல்லாம் மத்திய அரசுக்கு போய்விடும் என்று ஜெயலலிதா சொன்னார். ஆனால் அவர் உயிரிழந்த பின்னர் ஏன் கையெழுத்திட்டனர்? அதனால்தான் மின் கட்டண உயர்வு. எனினும் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய காங்கிரஸ் சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
‘பட்ஜெட்டில் தமிழகம் குறித்து சொல்லியிருக்க வேண்டுமானால் எங்களுக்கு 25 எம்பி-க்களை கொடுத்திருக்க வேண்டும்’ என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சொல்கிறார். பிற்போக்குவாதிகள் அப்படித்தான் பேசுவார்கள். 25 எம்பி-க்களை கொடுக்காவிட்டால் தமிழகம் புறக்கணிக்கப்படுமா? பொது வாழ்க்கையில் உள்ளவர் பேசும் பேச்சா இது? தமிழக மக்கள் கூர்ந்து கவனித்துக்கொண்டுள்ளனர். ஏற்கெனவே அவர்களுக்கு ஜனநாயக ரீதியாக தண்டனை கொடுத்துள்ளனர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் டெபாசிட்கூட வாங்க முடியாத வகையில் மக்கள் தீர்ப்பளிப்பார்கள்” என்றார்.
+ There are no comments
Add yours