கள் இறக்க அனுமதி கோரிய போராட்டத்தில்.. விஷம் குடித்த விவசாயியால் பரபரப்பு !

Spread the love

பொள்ளாச்சி அருகே கள் இயக்க அனுமதி கோரி போராட்டம் நடத்த வந்த விவசாயிகளில் ஒருவர், திடீரென பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்திய 55 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஷச்சாராயம் அருந்திய மேலும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பலி எண்ணிக்கை உயரக்கூடிய அச்சம் இருந்து வருகிறது.

இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக போலீஸார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் போலீஸார் நடத்தி வரும் சோதனையின் போது, கள் இறக்கி விற்பனை செய்வதற்கும் அவர்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கேரள மாநிலத்தை ஒட்டி உள்ள பகுதிகளில், கள் இறக்குவதற்கு அனுமதி இல்லாததால், விவசாயிகள் சிலர் அனுமதியின்றி கள் இறக்கி விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு கல் இறக்கப்படும் தோப்புகளுக்கு சென்று போலீஸார் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருவதோடு, கள் இறக்கும் தென்னந்தோப்புகளின் உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கையும் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கள் இயக்க அனுமதி வழங்கக் கோரி நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் கே.எஸ்.பாபு தலைமையில் பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு கள் இறக்க அனுமதி வழங்கக் கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது போராட்டத்திற்கு வந்திருந்த பாலசுப்ரமணியம் என்ற விவசாயி, திடீரென தான் மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார், உடனடியாக அவரை தடுத்து நிறுத்தியதோடு, அவரிடமிருந்து பூச்சி மருந்து பாட்டிலையும் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இந்த சம்பவத்தால் போராட்டத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. உடன் வந்திருந்த விவசாயிகள் அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours