விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஒருவர் பலி- தீவீர சிகிச்சை பிரிவில் இருவர் !

Spread the love

விழுப்புரம்/ கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த பரபரப்பு அடங்குவதற்குள், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கள்ளச் சாராயம் குடித்து ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 65 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி 21 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சின்னதுரை, நடுப்பையன், கதிரவன், கண்ணன், புதுச்சேரி மடுகரை மாதேஷ், சக்திவேல், சிவக்குமார், பன்சிலால், கவுதம்சந்த் ஜெயின் ஆகிய 11 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த சிபிசிஐடி போலீஸார், நேற்று முன்தினம் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மீண்டும் கடலூர் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது டி.குமாரமங்கலம் கிராமம். கடந்த 5 நாட்களுக்கு முன்பு இங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் அருகே கள்ளச் சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதை குடித்த ஜெயராமன் (65) மற்றும் 2 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஜெயராமன் நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, குடும்பத்தினரிடம் ஒப்படைக் கப்பட்டது. மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிமுக, பாமக கண்டனம்: கள்ளச் சாராயத்தால் மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: சம்பந்தப்பட்ட இடத்தில் கள்ளச் சாராயம் விற்கப்படும் காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டு சுட்டிக்காட்டிய பிறகும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அரசுக்கு நிர்வாகத் திறன் இல்லாததே இதற்கு காரணம்.

பாமக தலைவர் அன்புமணி: கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு பதவி விலக வேண்டும். சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

பெட்ரோல் பங்க் பாதாள தொட்டியில் 2,000 லிட்டர் மெத்தனால் பறிமுதல்: பண்ருட்டி அருகே செயல்படாமல் இருந்த பெட்ரோல் பங்க்கில் பதுக்கி வைக்கப்பட்ட 2 ஆயிரம் லிட்டர் மெத்தனால் கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் தரப்பில் கூறியதாவது: சென்னையில் உள்ள ரசாயன நிறுவனத்தில் இருந்து ஒரு பேரல் மெத்தனாலை ரூ.11 ஆயிரத்துக்கு வாங்கி, ரூ.40 ஆயிரத்துக்கு விற்றுள்ளனர். இதில் பலருக்கு தொடர்பு உள்ளது. சென்னையில் வாங்கிய மெத்தனாலை முதலில் கள்ளக்குறிச்சியில் விற்றதாக புதுச்சேரி மடுகரை மாதேஷ் வாக்குமூலம் அளித்திருந்தார். அதேபோல, பண்ருட்டி அடுத்த வீரபெருமாநல்லூர் பகுதியில் செயல்படாமல் உள்ள பெட்ரோல் பங்க்கில் 2 ஆயிரம் லிட்டர் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, வீரபெருமாநல்லூரில் மாதேஷ் குத்தகைக்கு எடுத்திருந்த, செயல்படாத பெட்ரோல் பங்க்கை ஆய்வு செய்தோம். வழக்கமாக பெட்ரோல், டீசல் நிரப்பி வைக்கப்படும் பாதாள தொட்டியில் 2 ஆயிரம் லிட்டர் மெத்தனால் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு சிபிசிஐடி போலீஸார் கூறினர். இதுபோல, வேறு எங்காவது செயல்படாத பங்க்களில் மெத்தனால் பதுக்கப்பட்டுள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours