சென்னையில் போதை பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு- 300 போலீசார் அதிரடி சோதனை

Spread the love

பெரும்பாக்கம்: பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் போதை பொருட்கள் புழக்கம் குறித்து 300 போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா, மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதா என துணை ஆணையர் தலைமையில் சுமார் 300 போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் அதிகளவு போதை பொருட்கள் நடமாட்டம் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. போலீஸார் நடவடிக்கை எடுத்தாலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துவது இப்பகுதியில் அதிகரித்த வண்ணம் உள்ளதாகவும், இப்பகுதியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களும் அதிகம் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், உதவி ஆணையாளர் கிறிஸ்டின் ஜெயசில், 4 ஆய்வாளர்கள், 21 உதவி ஆய்வாளர்கள், பெண் காவலர்கள் உள்பட 256 காவலர்கள் என சுமார் 300 பேர் இப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்கு வந்த போலீசார், பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் 20 ஆயிரம் குடியிருப்புகள் உள்ள இப்பகுதியில் 1,400 குடியிருப்புகளில் அதிரடியாக போலீஸார் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சோதனையின் போது போலீஸார் வீடுகளில் உள்ள பாத்திரங்கள், ஆடைகள், பைகள் என மூலைமுடுக்கெல்லாம் விடாமல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 கத்தி, கஞ்சா, குட்கா பொருட்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். போலீசார் மேற்கொண்ட இந்த அதிரடி சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours