அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தல் !

Spread the love

பாம்பன் பகுதியில் இலங்கைக்கு கடல் வழியாக நாட்டுப் படகில் கடத்தப்பட்ட 108 கோடி ரூபாய் மதிப்புள்ள 99 கிலோ எடை கொண்ட ஹாசிஷ் என்ற போதைப் பொருளை மண்டபத்தை ஒட்டிய நடுக் கடலில் மத்திய வருவாய்ப் புலனாய்வு துறையினர் மற்றும் கடலோரக் காவல் படையினர் இணைந்து பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. நாட்டின் பல மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தி வரப்படுவதாகவும், இங்கிருந்து இலங்கை வழியாக பல நாடுகளுக்கு கடத்தப்படுகிறது மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை கூறியிருப்பது பல்வேறு செய்திகளை நமக்கு சொல்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

உலக அளவிலான போதைப் பொருட்கள் கடத்தலின் மையமாக தமிழ்நாடு மாறி வருகிறது என்பது தான் அவற்றில் முதன்மைச் செய்தியாகும் என்று சுட்டிக் காட்டிய ராமதாஸ், “தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டமும், பயன்பாடும் அதிகரித்து வருவது குறித்தும், அவற்றை ஒழிக்க வேண்டியதன் தேவை குறித்தும் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல் துறையும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டிலும், தமிழகத்தையொட்டிய கடல் பகுதியிலும் கடந்த சில நாட்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இவை அனைத்தையும் மத்திய அமைப்புகள் தான் செய்துள்ளனவே தவிர, இதில் மாநில அமைப்புகளின் பங்களிப்பு சிறிதும் இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும், “பல மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்கள் தமிழ்நாட்டுக்கு கடத்தி வரப்பட்டு, இலங்கைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அவை மத்திய அமைப்புகளால்தான் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஆனால், தமிழக போலீஸுக்கும் உளவுத் துறைக்கும் இது குறித்து எதுவுமே தெரியவில்லை என்றால், அந்த அமைப்புகள் செயலிழந்து விட்டன அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டு விட்டன என்று கருத வேண்டியிருக்கிறது.

மது மற்றும் கஞ்சா போதை தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கின்றன. அடுத்ததாக வெளிநாட்டு போதைப் பொருட்களும் தமிழ்நாட்டு இளைஞர்களை குறிவைக்கத் தொடங்கியிருக்கின்றன. தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு, போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தமிழ்நாட்டை போதையில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours