சென்னை: வடலூர் வள்ளலார் கோயிலுக்கு பின்னால் உள்ள பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மேற்கொள்ள கூடாதுஎன இடைக்கால தடை விதித்துஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபைக்கு சொந்தமான பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அமர்வில் இதன் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், வள்ளலார் கோயிலின் பின்புறம் உள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கவும், கோயிலில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் முதியோர் இல்லம், சித்த மருத்துவமனை உள்ளிட்ட கட்டுமானங்களை மேற்கொள்ளும் வகையிலும், விவசாய நிலத்தை வகை மாற்றம் செய்து வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய கோரி புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதே நீதிபதிகள் அமர்வில் இந்த புதிய மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘உரிய சட்ட விதிகளை பின்பற்றாமல் கட்டுமானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால், அந்த கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், ‘அனைத்து அனுமதிகளும் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டே வழங்கப்பட்டுள்ளது என்பதால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என அறநிலையத் துறை மற்றும் சத்திய ஞான சபை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘தமிழ்நாடு நகரமைப்பு சட்ட விதிகளின்படி, விவசாய நிலத்தை பிற பயன்பாடுகளுக்காக வகை மாற்றம் செய்வதற்கு, நகரமைப்பு துறை உதவி இயக்குநர், வேளாண் இணை இயக்குநர், மாவட்ட ஆட்சியரின் தடையில்லா சான்று அல்லது அறிக்கைகளை பெற்ற பிறகே ஒப்புதல் அளிக்க முடியும்.
ஆனால், இந்த விதிகளுக்கு முரணாக, வள்ளலார் கோயிலின்பின்புறம் உள்ள பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அந்த பகுதியில் எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது’’ என்று இடைக்கால தடை விதித்தனர். ‘‘அதேநேரம், கோயிலில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள நிலம் முறைப்படி வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அங்கு கட்டுமான பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை.அங்கு பணிகளை தொடரலாம்’’ என்று உத்தரவிட்டு, விசாரணையை அக்.17-க்கு தள்ளிவைத்தனர்.
+ There are no comments
Add yours