”பாசன நீரினை..” தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை!!

Spread the love

பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன நீரினை கடைமடை வரை சமச்சீராக பகிர்ந்தளிக்கதமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தப்படி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பொழியும் மழைநீரை சேகரித்து, அப்போதைய கோவை மாவட்டத்தில் இருந்த பல்லடம், உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம் தாலுகாக்களில் விவசாயத் தேவைக்கு பயன்படுத்தும் வகையில் பரம்பிக்குளம் – ஆழியாறு கால்வாய் பாசனத் திட்டம் கடந்த 1967-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் திட்டத்தில் கிடைக்கப்பெறும் நீரினை பாசனப் பகுதிகளுக்கு முறையாகப் பகிர்ந்தளிக்காமல் தமிழ்நாடு அரசு அலட்சியம் காட்டிவருவதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

பெருந்தலைவர் காமராசர் அவர்களால் தொலைநோக்கு பார்வையுடன் தொடங்கப்பட்ட பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத்திட்டம் தற்போது ஏறத்தாழ 4.21 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வெள்ளக்கோவில், காங்கேயம் உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு பாசன நீர் சென்று சேர உரிய நடவடிக்கை எடுக்காததால் விவசாயப் பெருமக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகினர்.

பாசன நீர் வேண்டி பல ஆண்டுகளாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்த விவசாயிகள், வேறுவழியின்றி நீதிமன்றத்தின் மூலம் சட்டப் போராட்டத்தினையும் முன்னெடுத்தனர். பாசன நீர் பகிர்வு தொடர்பான வழக்கில் பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன நீரினை சமச்சீராக 7 நாட்கள் பகிர்ந்தளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், இன்றுவரை தமிழ்நாடு அரசு பாசன நீரினை சமமாக பகிர்ந்து அளிக்கவில்லை என்பதுதான் பெருங்கொடுமை.

விவசாயப் பெருமக்கள் தங்களுடைய உடலையும், உயிரையும் வருத்தும் போராட்ட வடிவத்தை தயவுசெய்து மாற்றிக்கொண்டு உரிமைக்கான அறப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் வெல்ல நாம் தமிழர் கட்சி துணைநிற்கும் என்று உறுதியளிக்கிறேன்

ஆகவே, தமிழ்நாடு அரசு பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன நீரினை காங்கேயம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கும் சமச்சீராக பகிர்ந்தளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று வலியுறுத்தி உள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours