காவிரி விவகாரத்தில் மெத்தனம் காட்டுகிறதா தமிழக அரசு?

Spread the love

காவிரி விவகாரம் கர்நாடகாவில் காட்டுத்தீ போல பற்றியெரிகிறது. தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரும் திறந்துவிடக்கூடாது என பாஜக, மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கர்நாடகாவில் ஒருமித்து போராட்டத்தில் குதித்துள்ளார்கள். கர்நாடக அரசும் அனைத்துக்கட்சி கூட்டங்கள், அறிக்கைகள் என பரபரப்பாக இயங்குகிறது. ஆனால், தமிழக அரசிடம் அத்தனை வேகம் இல்லை என்ற வேதனைக் குரல்கள் டெல்டாவில் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

ஜூன் 12-ம் தேதி மேட்டூரில் தண்ணீர் திறந்தவுடன், நம்பிக்கையுடன் சுமார் ஐந்தரை லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியை தொடங்கினார்கள் டெல்டா விவசாயிகள். அப்படி விதைத்த முதலெல்லாம் தண்ணீரில்லாமல் கருகி நிற்பதால் என்னதான் செய்வதென்று தெரியாத கையறு நிலையில் கலங்கித் தவிக்கிறார்கள்.

குறுவை சாகுபடிக்கு சில ஆண்டுகளாக பயிர்க் காப்பீடும் செய்ய முடியாத சூழலில் உரிய இழப்பீடாவது கிடைக்குமா என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு. அடுத்ததாக இப்போதிருக்கும் தண்ணீரை வைத்து சம்பா சாகுபடியையாவது செய்ய முடியுமா என்ற கேள்வியுடன் இன்னும் விதைக்காமல்கூட விக்கித்து நிற்கிறார்கள் உழவர்கள்.

கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, “ காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்கிறது. மேகேதாட்டு விவகாரத்தை தமிழ்நாடு தேவையில்லாமல் எதிர்க்கிறது. நாங்கள் திறந்துவிடும் நீரை தமிழ்நாடு வீணாக கடலுக்கு அனுப்புகிறது” என்றெல்லாம் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். ஆனால், இதற்கெல்லாம் தமிழக முதல்வர் உரிய பதிலடி கொடுக்கவில்லை. அவரின் மவுனம் எங்களை மேலும் துயரத்தில் தள்ளுகிறது என்று வேதனையோடு வெதும்புகிறது விவசாயிகள் தரப்பு.

கர்நாடக அரசு சுறுசுறுப்போடு காவிரி விவகாரத்தை கையாண்டுக் கொண்டிருக்கும் சூழலில், தமிழ்நாடு அரசு அடுத்தடுத்த நடவடிக்கைகளில் மிகவும் பின் தங்கியே இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் விவசாய சங்கங்களுக்குள் வெடிக்கத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், “கர்நாடகாவின் தற்போதைய செயல்கள் அனைத்துமே சட்டவிரோதமானது. அனைத்துக்கட்சி கூட்டம், மேகேதாட்டு விவகாரம் என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவே கர்நாடக அரசின் நடவடிக்கைகள் உள்ளன. சட்டவிரோதமான இந்த அரசியல் நாடகங்களை எல்லாம் அனைத்துக்கட்சிகளையும் ஒருங்கிணைத்து கர்நாடக அரசு செய்துகொண்டிருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்ட தரப்பில் உள்ள தமிழ்நாடு அரசு இப்படியான நடவடிக்கைகளை எடுக்கவே இல்லை.

ப்ரட்டோகாலின்படி கர்நாடக மாநில முதல்வர் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறபோது, அதற்கு தமிழக முதல்வர்தான் பதிலளிக்க வேண்டும், துறையின் அமைச்சர் அல்ல. இதில் ஏன் முதல்வர் தயக்கம் காட்டுகிறார்… பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குரலாக அவர் ஏன் ஒலிக்க மறுக்கிறார்… ஐந்தரை லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ள இழப்பை முதல்வர் உணர்ந்துள்ளாரா? என்பதே எங்களுக்குத் தெரியவில்லை.

கர்நாடகாவில் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று ரணகளமாகிக்கொண்டிருக்கிறது. அம்மாநில அரசே இதற்கு துணை நிற்கிறது. ஆனால் ‘நானும் டெல்டாகாரன்தான்’ என பெருமை பேசும் முதல்வர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட எங்களுக்காக எந்தவிதத்திலும் உடன் நிற்கவில்லை; குரல்கொடுக்கவில்லை. வெறும் சட்டப்போராட்டத்தால் மட்டுமே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்துவிடாது. மாநிலத்தின் ஒட்டுமொத்த போராட்டங்கள், கொந்தளிப்புதான் தீர்ப்பில் ஆதிக்கம் செலுத்தும்.

அந்தவகையில், இந்நேரம் அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கூட்டியிருக்க வேண்டும். உதாரணமாக, ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்தது. ஆனால் தமிழகத்தில் நடந்த மக்கள் புரட்சியும், அதற்கு ஒத்துழைத்த அப்போதைய ஓபிஎஸ் அரசின் நடவடிக்கைகளாலும் தீர்ப்பே மாற்றப்பட்டு இப்போது ஜல்லிக்கட்டு நடக்கிறது.

ஒருபக்கம், மத்திய அரசின் கீழ் இயக்கும் காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. மறுபக்கம், தமிழக அரசு மெத்தனப்போக்கோடு நடந்து கொண்டிருக்கிறது. ஜூன் 12-ல் தண்ணீரை திறந்து விவசாயிகளை பயிர்செய்யலாம் என்று சொன்னது தமிழக முதல்வர்தான். அப்படிச் சொன்னவர் இப்போது 5 லட்சம் குறுவை பயிர் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து வாயே திறக்காமல் இருப்பது என்ன நியாயம்?

அண்மையில் டெல்டா மாவட்டங்களுக்கு வந்த முதல்வர் ஒரு விவசாயியைக்கூட சந்திக்கவில்லை. விவசாயிகளை சந்தித்துப் பேசி களநிலவரத்தை உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கலாம். இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் இப்போது கையறு நிலையில் பரிதவிக்கிறார்கள். காவிரியில் தண்ணீர் திறக்காத கர்நாடகாவுக்கு எதிராக கடந்த ஜூலை 1-ம் தேதியே தமிழக அரசு சட்டப்போராட்டத்தை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் ஆகஸ்டு 14-ல் தான் இவர்கள் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த காலதாமதம்தான் விவசாயிகள் இப்போது கடுமையான பாதிப்புக்கு உள்ளாவதற்கு மிக முக்கிய காரணமாகும்” என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதில்சொன்ன திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், “ 1974-ல் இருந்து போராடி காவிரி நடுவர் மன்றம் அமைத்து, இடைக்கால தீர்ப்பைப் பெற்று அதை அரசாணையாக கொண்டு வந்து, அதன்பின் 2018-ல் இறுதித் தீர்ப்பையும் பெற்றோம். இத்தனைக்குப் பிறகும் காவிரி மேலாண்மை ஆணையம் கொடுக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது கர்நாடகா.

இப்போது நாம் படும் துயரங்களுக்கு காரணம் பாஜகவும், அதிமுகவும்தான். 2018-ல் வந்த இறுதி தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்க வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் அலட்சியத்தால், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. வாரியம் அமைக்கப்பட்டிருந்தால் அது சக்தி வாய்ந்த அமைப்பாக இருந்திருக்கும். ஆனால், ஆணையத்தை அமைத்து ஏமாற்றிவிட்டார்கள். காவிரி விவகாரத்தில் ஒன்றிய அரசுகள் நமக்கு துரோகம் இழைக்கிறது. இந்த விஷயத்தில் பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே தமிழ்நாட்டுக்கு எதிராகவே செயல்படுகின்றன.

தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு தவறானது. முதலில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்தார். அடுத்ததாக, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை கூட்ட கடிதம் கொடுத்தார். அடுத்ததாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம்.

காவிரி விவகாரம் என்பது தமிழ்நாட்டின் ஜீவாதார பிரச்சினை. எனவே இதில் அலட்சியமோ, காலதாமதமோ செய்யவே முடியாது. இப்போது, தினமும் 5 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்துக்கு திறக்கவேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இதற்குக் காரணம், எங்களின் சட்ட நடவடிக்கைகள்தான். இதுவே நமக்கு ஓர் முன்னேற்றம்தான்.

இதையும் ஏற்க மறுத்து கர்நாடகம் அடம்பிடிக்கிறது. இதையும் இனி முறையாக எதிர்கொள்ளவே இருக்கிறோம். மற்றபடி இந்த விவகாரத்தை வைத்துக்கொண்டு தினந்தோறும் அரசியல் செய்து வெளியில் காட்டிக்கொள்ள வேண்டுமா என்ன? நாங்கள் இந்த விஷயத்தில் எடுக்கவேண்டிய அவசியமான நடவடிக்கைகளை உரிய நேரத்தில் உரிய முறையில் எடுத்து வருகிறோம். அதேபோல இப்போது தண்ணீர் இல்லாமல் கருகிப்போன பயிர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, காவிரி விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றார்.

காவிரி என்பது டெல்டா மாவட்டங்களுக்கான விவசாயம் தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல. சென்னை முதல் ராமநாதபுரம் வரையிலான தமிழகத்தில் மூன்றில் இரு பங்கு குடிநீர் தேவையையும் காவிரிதான் பூர்த்தி செய்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் உரிய காலத்தில், உரிய வேகத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது!


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours