இது மக்களுக்கான அரசு.. மக்களுக்காக உழைகின்ற அரசு- அமைச்சர் செந்தில் பாலாஜி

Spread the love

கரூர்: “இது மக்களுக்கான அரசு, மக்களுக்காக உழைகின்ற அரசு” என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக- நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இன்று (அக். 19ம் தேதி) நடைபெற்றது. ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமை வகித்தார். 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து பங்கேற்று பணியாளர்களை தேர்வு செய்தன.

முகாமை தொடங்கி வைத்து தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசியது, “வேலைவாய்ப்பு முகாம்களில் பணி நியமன ஆணைகளை வழங்கும்போது அதனை பெறுபவர்கள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை முதல்வர் நிறைவேற்றி வருகிறார்.

முகாம் நடத்துவதற்கான உழைப்பின் வெற்றியை தெரிந்துக் கொள்ளலாம். முதல்வர் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து பல்வேறு தொழிற்சாலைகளை உருவாக்கி லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறார். கரூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பெரியளவிலான 7 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் 53 சிறிய வேலை வாய்ப்பு முகாம்களில் 1,425 நிறுவனங்களில் 5,021 பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 1.75 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இது மக்களுக்கான அரசு. மக்களுக்காக உழைகின்ற அரசு. பல ஆண்டுகளாக இலவச மின் இணைப்புக்கு காத்திருந்த விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.4 தொகுதிகள் கொண்ட சிறிய மாவட்டமான கரூருக்கு வேளாண் கல்லூரி, அரவக்குறிச்சி அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 3 ஆண்டுகளில் கரூர் மாவட்டத்திற்கு ரூ.3,000 கோடியில் திட்டங்கள் வழங்கப்பட்டு, வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மகளிர் வாழ்வினை மேம்படுத்த மகளிர் உரிமைத் தொகை எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமாக வழங்கப்பட்டு இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழ்கிறது. மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காக்கும் 48, இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இங்கு பல்வேறு நிறுவனங்களின் நேர்முகத் தேர்வில் பங்கேற்று 2, 3 நிறுவனங்களில் வேலை பெற்றவர்களை அதனை வீட்டுக்கு சென்று முடிவெடுக்காமல் இங்கேயே முடிவு செய்தால் அந்த வாய்ப்பு மற்றவர்களுக்கு பயன்படும்’’ என்றார்.

கரூர் எம்.பி. செ.ஜோதிமணி, எம்எல்ஏக்கள் ரா.மாணிக்கம் (குளித்தலை), ரா.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் ப.சரவணன், மண்டலக்குழு தலைவர் எஸ்.பி.கனகராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கரூர் மாநகராட்சி 44வது வார்டு மாமன்ற உறுப்பினர் மோகன்ராஜ் வரவேற்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours