அத்வானியை வீட்டிற்கு அனுப்பியவர் மோடி- சி.வி.சண்முகம்

Spread the love

விழுப்புரம்: “பாஜகவில் 75 வயதானால் பதவியை விட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும். ஆனால், மோடிக்கு பதவி கொடுத்து அவர் எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்” என அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

விழுப்புரம் அருகே கோலியனூரில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளரான சி.வி சண்முகம் கலந்துகொண்டு பேசியதாவது: உழைப்பவர்களுக்கு கேட்காமலேயே பதவி கொடுத்து அழகுபார்ப்பது தான் அதிமுக. கிளைச் செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி இன்று பொதுச்செயலாளராக உள்ளார்.

இதை மற்ற கட்சியில் நினைத்து பார்க்க முடியாது. நேற்று தொடங்கிய கட்சியில் கூட வாரிசு அரசியல் நிலைமை உள்ளது. பாஜகவில் 75 வயதானால் பதவியை விட்டு வீட்டுக்குச் செல்லவேண்டும். ஆனால் மோடிக்கு பதவி கொடுத்து அவர் எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார். அத்வானிக்கு கார் ஓட்டியவர் தான் மோடி. அப்படிபட்ட அத்வானியையே வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார். ஆனால் மோடிக்கு 75 வயதாகியும் அவர் வீட்டுக்குச் செல்லவில்லை. பாஜக சட்டதிட்டங்களை அவருக்கு ஏற்றார் போல் மாற்றிவிட்டார்.

பிஹார், உத்திரப்பிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் குடும்ப வாரிசுகள் தான் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவிகளில் இருக்கிறார்கள். புதிய கட்சி ஆரம்பிக்கும் போதே மனைவி, பிள்ளைகளை கட்சிக்கு அழைத்து வந்துவிடுவார்கள். ஆனால், அதிமுகவில் அப்படிகிடையாது. அதிமுக ஒவ்வொரு காலகட்டதிலும் அழிந்து போய்விடும் என்று கூறினார்கள். அப்படிக் கூறியவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்கள். கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் தான் காணாமல் போயிருக்கிறார்கள். அதிமுக அழியவில்லை தொண்டர்களை நம்பி இருக்கிற இயக்கமாக அதிமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இன்னும் இரண்டு தேர்தலுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் தான் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் நிலை ஏற்படும். கொடியேந்துவது எந்த அளவிற்கு முக்கியமோ அதுபோன்று அதிமுகவை பற்றி தவறாக சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களுக்கு நிர்வாகிகள் பதிலளித்து பதிவு போடவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து கூட்டத்தில் வருகை பதிவேட்டினை படித்த சி.வி.சண்முகம் முக்கிய நிர்வாகிகள் யார் யாரெல்லாம் கூட்டத்திற்கு வரவில்லை என்பதை அறிந்து நிர்வாகிகள் ஏன் வரவில்லை? வராதவர்கள் பெயர்களில் ஏன் கையெழுத்திடப்பட்டுள்ளது என கட்சி நிர்வாகிகளை கடிந்து கொண்டதுடன், “கட்சிக் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும்; தவிர்க்கக்கூடாது” என எச்சரித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours