கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 40 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 98 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். இதில் 19 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கருணாபுரம் கிராமத்தில் மட்டும் 26 பேர் உயிரிழந்ததால் அந்த கிராமமே ஆழ்ந்த சோகத்தில் காட்சியளிக்கிறது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர்.
இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று இரவு 11 மணியளவில் 17 பேர் வரையில் உயிரிழந்தனர். நள்ளிரவில் இறப்பின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து அதிகாலையில் உயிரிழப்பு 29-ஆக அதிகரித்தது. அதைத் தொடர்ந்து மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
முற்பகலில் இறப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 36 என ஆனது. மாலை நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. உயிரிழந்தவர்களில் 3 பெண்களும் அடங்குவர். இறந்தவர்களில் 31 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. உடல்கள் ஒப்படைக்கப்பட்டதில் கருணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 26 பேர் அடங்குவர்.
உயிரிழந்தவர்களின் உடல்களைப் பெற்றுச் சென்ற கருணாபுரத்தில் திரும்பிய வீதியெல்லாம் மரண ஓலங்களை கேட்க முடிந்தது. இக்கிராமத்தில் 6 தெருக்கள் உள்ளன. ஒரு தெருவுக்கு குறைந்தபட்சம் 4 முதல் 5 பேர் உயிரிழந்திருப்பது கடும் சோகத்தை ஏற்படுத்திருக்கிறது. தெருவில் இடநெருக்கடி இருந்ததால் ஒரே பந்தலில் 4 பேரின் சடலங்கள் வைக்கப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவர்களில், 19 பேரின் உடல் ஒரே இடத்தில் அக்கிராமத்தில் உள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. எஞ்சிய 9 பேரின் உடல்கள் அதே இடுகாட்டில் அவர்கள் சமூக வழக்கப்படி அடக்கம் செய்யப்பட்டது. இறுதி அஞ்சலிக்காக கருணாபுரம் இடுகாட்டில் மொத்த கிராமமே திரண்டிருந்தது. இதற்கிடையே கடும் மழை பெய்யததால், கடும் சிரமத்திற்கிடையே இறுதி சடங்குகள் நடைபெற்றன.
இதற்கிடையே, 98 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் – முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 19 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே காலை முதல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கடும் வயிற்று வலி இருந்து வருவதாகவும் தெரிவித்தனர். அவர்களை அவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க தூக்கிக் கொண்டு வந்தனர்.
ஒருபுறம் ஏற்கெனவே உயிரிழந்தவர்களின் உறவினர்கள், மறுபுறம் புதிததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்களின் கூட்டம் என கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை கடும் இறுக்கத்தில் இருந்து வருகிறது. இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் உடனுக்குடன் முதலுதவி சிகிச்சை அளிக்க, சிறப்பு மருத்துவர்களும் கண்காணித்து உடல்நிலைக்கு ஏற்ப தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்காக சிவப்பு (அதிதீவிரம்), மஞ்சள் (ஓரளவு பாதிக்கப்பட்டவர்கள்), பச்சை (லேசான பாதிப்பு) என 3 பிரிவாக வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களிடம் பேசிய போது, “கடந்த 18-ம் தேதி காலை கள்ளச் சாராயம் வாங்கி, அருந்தினோம். அதன் பாதிப்பு காலை தான் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறோம்” என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து மருத்துவமனையைச் சுற்றிலும் உறவினர் காத்திருந்து, என்ன செய்வது என்று அறியாமல் காத்திருந்து வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி 36 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் மாவட்டங்களில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவ வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. அது என்னவானது? யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. கள்ளச் சாராய விற்பனையை தடுத்து நிறுத்தக்கோரி கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக சட்டப் பேரவையில் சபாநாயகரிடம் கவன ஈர்ப்புத் தீர்மானம் அளித்துள்ளார். ஆனால், இம்மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சரான பொதுப்பணித்துறை அமைச்சர் பதிலளிக்கும் போது, இதுதொடர்பாக எங்களிடம் தகவல் அளித்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம் என்கிறார்.
சபாநாயாகரிடமே அளித்தும் நடவடிக்கை இல்லை என்றால் என்ன சொல்வது. நிர்வாகத் திறமையற்ற மு.க.ஸ்டாலின் பதவி விலகவேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக திகழ்கிறது. திருச்செங்கோடு வட்டம் தேவனோங்கோடு கிராமத்தில் திமுக நிர்வாகி கள்ளச் சாராயத்தை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்துள்ளார். அந்த நபர் குறித்து புகார் அளித்தால், கள்ளச் சாராயம் விற்ற திமுக நபர் மீது நடவடிக்கை எடுக்காமல், அவரது கடையில் வேலை செய்த வடநாட்டு இளைஞர்களை கைதுசெய்துள்ளனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு அமைச்சர்கள் குழு போட்டு தேர்தல் பணியாற்றும் திமுக அரசு, இங்கு மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நிலையில், அமைச்சர் குழுவையும், மருத்துவக் குழுவையும் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாமே. மக்கள் நலன் பற்றி கவலைப் படாதவர் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கள்ளச் சாராயம் குடித்து மேலும் பலர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கள்ளக்குறிச்சியின் மையப்பகுதியில் கள்ளச் சாராயம் விற்கப்பட்டுள்ளது. கள்ளச் சாராயம் விற்பனை நடந்த இடத்தின் அருகிலேயே காவல் நிலையம் உள்ளது. நீதிமன்றம் உள்ளது. அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் கள்ளச் சாராய விற்பனையை தடுக்கவில்லை. இதற்குப் பின்னால் மிகப்பெரிய கும்பல் உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வருகின்றன. தற்போது இந்த அரசு கள்ளச் சாராயம் அருந்தி உயிரிவந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருப்பதாக அறிகிறேன். ஆனால், அது போதாது, ஒரு குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்.
கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்த தம்பதியினரால் அவர்களது 3 பிள்ளைகளின் நிலை கவலைக்குரியதாக மாறியுள்ளது. அதில் ஒரு மகள் மற்றும் இரு மகன்களின் கல்விச் செலவை அதிமுக ஏற்பதோடு, அவர்களின் குடும்பத்திற்கு 10 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றார். பேட்டியின் போது முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
பிரேமலதா: தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் விற்பனைக் கடைகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. தற்போது கள்ளச் சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்களில் பலர் தீவிர பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மூட வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை வைக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், நான் ஒரு பெண் என்ற முறையில் என்னை கட்டியணைத்து கவலை தெரிவிக்கின்றனர். மது அருந்தி பாதிக்கப்பட்டவர்களை பார்த்தை, ஏன் கள்ளச் சாராயத்தை அருந்தினீர்கள் எனக் கேட்டபோது, விலை குறைவகா கிடைப்பதால் வாங்கினோம் என்று கூறும்போது அவர்களின் ஏழ்மை நிலை புரிந்து கொள்ள முடிகிறது.
தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்ற போது, போதையில்லா தமிழகம் என்றார். ஆனால், ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் இதுவரை அந்த நிலை ஏற்படவில்லை. என்னை சந்திக்கும் பெண்கள் பலர் டாஸ்மாக்கை மூட வேண்டும் என பேசுமாறு என்னிடம் வலியுறுத்துகின்றனர். தேர்தல் அரசியல் மட்டுமே இங்கு நடைபெறுகிறது.
எந்த நிகழ்ச்சியானாலும் அங்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், இங்கு இவ்வுளவு பெரிய பாதிப்பு ஏற்பட்ட பின்னரும் வராதது ஏன். எனவே பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் சந்திக்க வேண்டும் என்றார்.
அண்ணாமலை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்திற்கு நேரில் சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். குழந்தைகளின் கல்விச் செலவுக்கு நிதியுதவி கொடுக்கப்படும். கிராம பகுதியில் கள்ளச் சாராய உயிரிழப்பு நடக்கவில்லை. நகரின் மையப்பகுதியில் நடந்துள்ளது. அரசாங்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது.
கள்ளச் சாராய விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தனப்போக்கை இது வெளிப்படுத்தி இருக்கிறது. கள்ளச் சாராய மரணத்தை மாவட்ட நிர்வாகம் மூடி மறைக்க பார்க்கிறது. அரசை பாதுகாப்பதே ஆட்சியர்களின் வேலையாக உள்ளது. கள்ளச் சாராயம் விவகாரம் தொடர்பாக விவரங்களை சேகரித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
திருமாவளவன்: கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து, இறுதி சடங்கு செலவிற்காக குடும்பத்திற்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து அவர் பேசும்போது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 24-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
+ There are no comments
Add yours