கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வந்த மேலும் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. 10 பேருக்கு கண்பார்வை பறிபோய் உள்ளதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் அருந்திய மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்தவர்களும் அங்கு விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி அருந்தியதாக கூறப்படுகிறது. இந்த கள்ளச்சாராயத்தில் மெத்தனால் எனப்படும் ரசாயனம் அதிகமாக இருந்ததால் அடுத்தடுத்து பலரும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதில் கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவம் மற்றும் கல்யாண் சுந்தரம் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தனர்.
இதனால் பலி எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது. இதில் 4 பேர் பெண்கள் ஆவர். தற்போது சிகிச்சையில் இருந்து வரும் 10 பேருக்கு விஷச்சாராயம் அருந்தியதால் பார்வை பறிபோய் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் பலி எண்ணிக்கை காரணமாக கருணாபுரம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி நிலவி வருகிறது.
+ There are no comments
Add yours