கோடநாடு விவகாரம் – எடப்பாடி பழனிசாமி ஐகோர்ட்டில் வழக்கு !

Spread the love

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ரூ.1.10 கோடி நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி மனு செப். 19ம் தேதி நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனது செல்வாக்கை குறைக்கும் வகையில் தனபால் பேட்டியளித்த வருவதாக புகார் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி காவலாளி ஒருவர் 11 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த முக்கிய ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த கும்பலில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் அதே ஏப்ரல் மாதம் கார் விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு வழக்கில் இதுவரை சுமார் 230 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை கடந்த 5 வருடங்களாக உதகை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து நடந்த உயிரிழப்புகள், கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அதுவும், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சூடுபிடித்தது. சமீப நாட்களாக கனகராஜின் சகோதரர் தனபால் பேட்டியளித்த வருகிறார். அவர் கூறுகையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் எனது சகோதரர் கனகராஜ் சில விஷயங்களை செய்தார்.

எனது சகோதரர் கனகராஜ் விபத்தில் உயிரிழக்கவில்லை, கொலை செய்யப்பட்டார் என இபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி பல்வேறு திடுக்கிடும் தகவலை தெரிவித்திருந்தார். இவரது பரபரப்பான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார். இவரது மனு செப். 19ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours