லாகூர்: இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் விராட் கோலி துவக்க ஆட்டக்காரராக அல்ல.. மூன்றாவது பேட்ஸ்மேனாக விளையாட வேண்டுமென பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா ஆடிய முதல் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி களம் கண்டார். அவருடன் கேப்டன் ரோகித் சர்மா இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்திருந்தார்.
இந்த சூழலில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் கம்ரான் அக்மல். “இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் சரியாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. விராட் கோலி மூன்றாவது பேட்ஸ்மேனாக ஆடினால் ஆட்டத்தின் அழுத்தத்தை சமாளிப்பார். ஆட்டத்தை வென்றும் கொடுப்பார். அது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது.
அதனால் பேட்டிங் ஆர்டரில் அவர் மூன்றாவது இடத்தில் களம் காண வேண்டும். அதற்கு மாறாக கோலியை வைத்து ஓபன் செய்வதில் இந்தியா உறுதியாக இருந்தால், இந்த தொடரின் ஏதேனும் ஒரு கட்டத்தில் அவர்கள் தடுமாறுவார்கள். கோலியை ஓபன் செய்ய வைத்து இந்தியா தவறு செய்வதாக நான் கருதுகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 5 போட்டிகளில் கோலி விளையாடி உள்ளார். அதன் மூலம் 308 ரன்களை அவர் எடுத்துள்ளார். இதில் நான்கு முறை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்துள்ளார்.
+ There are no comments
Add yours